ஒரு வருட தாமதத்தின் பின்பு சோமாலியாவுக்கு புதுப்பழைய ஜனாதிபதி ஒருவர் தெரிவு.
ஹஸன் ஷேய்க் மஹ்மூத் என்பவர் ஞாயிறன்று நடந்த சோமாலியாவின் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தேர்தல் கடும் பாதுகாப்புடன் மொகடிஷுவிலிருக்கும் சர்வதேச விமானத்தளப் பிராந்தியத்தில் நடைபெற்றது. நேரடியாகத் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்ட அந்தத் தேர்தல் நிகழ்ச்சியில் ஆரம்பக் கட்டத்தில் 36 பேர் வேட்பாளர்களாக இருந்தார்கள். ஒருவர் மட்டும் பெரும்பான்மையான வாக்குகள் பெறும்வரை தேர்தல்கள் மீண்டும் மீண்டும் நடாத்தப்பட்டன. கடைசிக் கட்டத்தில் 165 பிரதிநிதிகளின் வாக்குகளை ஆதரவாகப் பெற்றார் வெற்றிபெற்ற ஹஸன் ஷேய்க் மஹ்மூத்.
ஆளுக்கொரு வாக்கு என்ற ஜனநாயக வழியில் சோமாலியாவில் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதில்லை. நாட்டின் வெவ்வேறு பகுதிகளின் ஜமீந்தார்கள் போன்று வெவ்வேறு சமூகத்தின் தலைவர்கள் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் நாடு சோமாலியா. அப்படியான சமூகத்தலைவர்களும், வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதி மக்கள் பிரதிநிதிகளும் சேர்ந்து பாராளுமன்றத்துக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் வாக்களித்து மூன்றிலிரண்டு பங்கு வாக்குகள் பெற்றவர் ஜனாதிபதியாகிறார்.
ஹஸன் ஷேய்க் மஹ்மூத் ஏற்கனவே 2012 – 2017 வரை ஜனாதிபதியாக இருந்தவர். லஞ்சம், ஊழல்கள் காரணமாக நாட்டை அபிவிருத்தி செய்யத் தவறியவராகும். தேர்தலில் வேட்பாளர்களாக இருந்த 36 பேரில் அவரைப் போலவே முன்பு ஆட்சியிலிருந்த நால்வர் பங்கெடுத்தார்கள். ஹவ்வீயெ என்ற பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து வந்தவர் ஹஸன் ஷேய்க் மஹ்மூத் ஆகும்.
தான் முன்பு தனது ஆட்சியில் நாட்டைச் சரியான வழியில் கொண்டுசெல்லத் தவறிவிட்டதாகவும், இந்த முறை அத்தவறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார். தேர்தல் வேட்பாளர்களிடையே பல அதிகார பேரங்கள் பேசப்பட்டே கடையில் ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். அதனால் இத்தேர்தலின் பின்னர் வேட்பாளர்களிடையே ஏற்படும் மனக்கசப்புக்கள் சமூகக் கலவரங்களாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆயினும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியும் பதவியிலிருந்து விலகும் ஜனாதிபதி முஹம்மது அப்துல்லாஹி முஹம்மதுவும் இறுதியில் ஒன்று சேர்ந்து நாட்டில் அமைதி நிலவப் பாடுபடுவதாக உறுதியளித்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்