மலைப்பாம்பு அம்மாவின் முட்டைகள் குஞ்சாக அவகாசம் கொடுத்து வீதிப்பணிகள் நிறுத்தப்பட்டன.
கேரளாவின் காசர்கோடு நெடுஞ்சாலை கட்டப்படும்போது உரலுங்கால் என்ற இடத்தருக்கே ஒரு மலைப்பாம்புத் தாய் புற்றுக்குள் முட்டையிட்டிருப்பதை வீதித்தொழிலாளர்கள் கவனித்தார்கள். அந்தப் பாம்பின் 24 முட்டைகளும் இயற்கையான முறையில் பொரித்துக் குட்டிகளாக அனுமதித்து 54 நாட்கள் வீதிப்பணிகளைத் தொடர்வது நிறுத்தபட்டது.
வீதிப்பணிகளின்போது இயந்திரங்கள் மண்ணைத் தோண்டிப் புரட்டியபோது நிலமட்டத்திற்கு நாலு அடிகள் ஆழத்தில் காட்டுப்பன்றியின் வளை ஒன்றைத் தனது புற்றாக்கி அந்த மலைப்பாம்புத் தாய் 24 முட்டைகளுடன் இருந்ததைப் பணியாளர்கள் கவனித்தனர்.
கேரளக் காடுகள் பராமரிப்புத்துறை பாம்புகள் முட்டையிடுதல் பற்றிய விபரங்களில் பிரத்தியேக ஞானமுள்ள அமீன் என்ற ஒருவரை அணுகி அவருடைய உதவியுடன் அந்த 24 முட்டைகளும் பொரிப்பதற்கான வழிவகைகளைச் செய்யும்படி கேட்டது. அமீன் பத்து வருடங்களுக்கு மேலாக பாம்புகளின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து அறிந்து அவைகளின் இனப்பெருக்க நடவடிக்கைகள் பற்றி அறிந்தவராகும்.
நேபாளத்திலிருக்கும் மிதிலா வனவிலங்கு பேணும் நிலையத்தில் ஊர்வன பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவரும் காசர்கோட்டுக்காரரான மவிஷ் குமாருடன் தொடர்புகொண்ட அமீன் மலைப்பாம்புக் குட்டிகள் பொரிப்பது பற்றிய மேலதிக விபரங்களை அறிந்துகொண்டார்.
மலைப்பாம்பு முட்டைகள் 27 – 31 செல்சியஸ் வெப்பநிலைக்குள்ளேயே குஞ்சாகின்றன. அவற்றில் சிறிது வித்தியாசமுண்டாகினாலும் பிறக்கும் குட்டிகள் ஆரோக்கியமானவையாகப் பிறக்காது. மவிஷ் குமாரின் ஆலோசனையின்படி தாய்ப்பாம்பின் உடல் சூட்டிலேயே இயற்கையாக அந்த முட்டைகள் குட்டிகளாகலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்கு சுமார் 60 – 65 நாட்களாகின்றன.
கட்டடப்பணிகளை 54 நாட்கள் நிறுத்திவிட்டு அமீன் தினசரி ஓரிரு தடவைகள் அந்தப் புற்றுக்குள் நுழைந்து அவைகளின் நிலைமை பற்றி அவதானித்து வந்தார். முட்டைகள் வெடிக்க ஆரம்பித்த பின்னர் தாய்ப்பாம்புக்கு அருகே அவை இருக்க்கவேண்டிய அவசியமில்லை. தாய்ப்பாம்பு முட்டைகளிலிருந்து விலகி ஓய்வெடுக்கும்.
எனவே முட்டைகள் வெடிக்க ஆரம்பித்ததும் அவை அமீனின் வீட்டில் பாம்பு முட்டைகள் பொரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டன. அமீன் முட்டைகளை எடுப்பதைக் கண்டும் தாய்ப்பாம்பு அவரைத் தாக்க முயற்சிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
24 மலைபாம்பு முட்டைகளும் குட்டிகளாகிவிட்டன. அவை அருகேயிருக்கும் அடர்ந்த காடொன்றுக்குள் விடப்பட்டன.
சாள்ஸ் ஜெ. போமன்