எகிப்தில் மரண தண்டனைகளுக்குப் பச்சைக் கொடிகாட்டிய இமாம் ஐ.ராச்சியப் பாராளுமன்றத்தில் உரையாற்றுவார்.
ஐக்கிய ராச்சிய அரச பாராளுமன்றத்தின் வரவேற்பை ஏற்று எகிப்தின் தலைமை முப்தி ஷௌக்கி அலம் ஞாயிறன்று அங்கே விஜயம் செய்திருக்கிறார். 2013 இல் எகிப்தின் தலைமை முப்தியாக நியமனம் பெற்ற ஷௌக்கி அதே வருடத்தில் எகிப்திய அரசு கவிழ்க்கப்பட்ட பின்னர் பதவியேற்ற இராணுவ ஆட்சியின் பக்கபலமாகச் செயற்பட்டு அந்த ஆட்சியால் விதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் மரண தண்டனைகளுக்கு அனுமதி வழங்கியவராகும்.
ஷௌக்கியை ஐக்கிய ராச்சியம் வரவேற்றிருப்பதுடன் அவரை நாட்டின் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் உரை நிகழ்த்தவும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அவைகளைத் தவிர அவர் அங்கு நடக்கப் போகும் வேறு பல கருத்தரங்குகள், மாநாடுகளிலும் பங்கெடுத்து உரையாற்றவிருக்கிறார்.
இராணுவத் தலைவராக இருந்த தற்போதைய எகிப்திய ஜனாதிபதி அப்துல் பத்தா அல்-ஸிஸி 2013 இல் அந்த நாட்டின் ஜனாதிபதியான முஹம்மது முர்ஸியின் ஆட்சியைக் கவிழ்த்துக் கைது செய்து சிறைக்கனுப்பினார். அதையடுத்து முர்ஸியின் ஆதரவாளர்கள், அரசை விமர்சித்து வந்தவர்கள் பலர் கூட்டங்கூட்டமாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அடையாளத்துக்கு வழக்கு நடத்தப்பட்டுச் சிறைக்கனுப்பப்பட்டார்கள். அவர்களில் பலருக்கு அடுத்த கட்டமாக மரண தண்டனை கொடுக்கப்பட்டு அவை நிறைவேற்றவும் பட்டது.
சிறையிலடைக்கப்பட்ட அரசியல் கைதிகளில் முன்னாள் ஜனாதிபதியும் ஒருவர். முர்ஸி சிறையில் சித்திரவதை செய்யப்பட்டுப் படிப்படியாகக் கொல்லப்பட்டார் என்று மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன. அதேபோலவே பலரும் சிறையிலேயே உபத்திரவத்துக்குள்ளாகி இறந்தார்கள். மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 17 பாலர்களும் அடங்குவர்.
அல்-ஸிஸி பதவியேற்ற காலத்திலிருந்து எகிப்து என்றுமில்லாத அளவு அதிகமானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றி வருகிறது. 2020 இல் உலகில் மரண தண்டனைகள் அதிக எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்திலிருப்பதாக அம்னெஸ்டி அமைப்பு குறிப்பிடுகிறது. ஷௌக்கியால் பச்சைக் கொடி காட்டப்பட்ட எகிப்தின் மரண தண்டனை நிறைவேற்றல்கள், சிறைச் சித்திரவதைகள் எகிப்திய அரசால் திட்டமிடப்பட்டு செய்யப்படும் அரசியல் கொலைகளே என்று இஸ்லாமிய அமைப்புக்களும், மனித உரிமை அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து குறிப்பிடுகின்றன.
பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஷௌக்கியை அரச விருந்தினராக அழைத்திருப்பது தம்மை அதிர்ச்சியடையச் செய்திருப்பதாக பிரிட்டனின் இஸ்லாமிய அமைப்பு குறிப்பிடுகிறது.
“அவருக்கு அழைப்பிதழ் அனுப்பியிருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. அவரை வரவேற்கும் முடிவை எடுத்தவர்களுக்கு ஷௌக்கியின் கைகளிலிருக்கும் அப்பாவிகளின் இரத்தக்கறை பற்றித் தெரியாது. அவரை எமது நாட்டின் அமைப்புகளில் உரையாற்ற அனுமதிக்கப்படாது. வரவேற்பை ரத்து செய்யவேண்டும்,” என்று கடுமையாகச் சாடுகிறார் முஸ்தபா அல்-டபக் என்ற பிரிட்டிஷ் இஸ்லாமிய அமைப்பின் காரியதரிசி.
சாள்ஸ் ஜெ. போமன்