சோமாலியாவுக்கு மீண்டும் அமெரிக்க இராணுவத்தை அனுப்ப ஜோ பைடன் முடிவு!
சோமாலியாவில் இயங்கிவரும் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான அல் ஷ்பாப் தனது பலத்தை மேலும் அதிகப்படுத்துவதைத் தடுக்குமுகமாக அந்த நாட்டில் மீண்டும் அமெரிக்க இராணுவத்தின் தளத்தை உருவாக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லொய்ட் ஒஸ்டினின் வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சோமாலியாவின் இராணுவத் தளமொன்றில் இயங்கிவந்த சுமார் 700 அமெரிக்க இராணுவ வீரர்களை அங்கிருந்து அகற்றும் முடிவை எடுத்தார். அதன் பின்னர் சோமாலியாவில் ஏற்பட்ட அரசியல் சிக்கல்கள் அந்த நாட்டில் தீவிரவாதம் பரவுவதற்கு வழியமைத்திருப்பதாகக் கருதப்படுகிறது. அந்த நிலைமை தொடராமலிருக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் நடந்திருக்க வேண்டிய ஜனாதிபதித் தேர்தல் ஒரு வழியாக, ஞாயிறன்று அங்கே நடந்து ஹஸன் ஷேய்க் முஹம்மது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
டிரம்ப் சோமாலியாவிலிருந்த இராணுவத்தை அகற்றிய பின்னரும் அங்கே அடிக்கடி அமெரிக்க இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளுக்காக அவ்வப்போது உள்ளே போய்த் திரும்பியிருக்கிறது. ஆனால், அந்த நிலை தொடருவது ஒரு நல்ல தீர்வதல்ல என்பதால் நிரந்தரமாக சுமார் 450 – 500 இராணுவ வீரர்களை அங்கே நிறுத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்