மாதவிலக்குக் காலத்தில் சம்பளத்துடன் விடுமுறை கொடுக்கும் முதல் ஐரோப்பிய நாடாகுமா ஸ்பெய்ன்?
ஒரு கைகளிலிருக்கும் விரல்களால் எண்ணக்கூடிய அளவு நாடுகளே உலகில் பெண்களின் மாதவிலக்குக் காலத்தில் அவர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை கொடுக்கின்றன. அக்கேள்வி எழுப்பப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அதன் விளைவு பெண்கள் வேலைக்குப் போவதற்கு அனுகூலமாக அமையுமா அல்லது இடையூறாகுமா என்ற வாதப் பிரதிவாதங்கள் எழுவதால் அதற்கான முடிவெடுப்பதை நாடுகள் தவிர்த்து விடுகின்றன. ஐரோப்பாவில் அந்த நகர்வை எடுக்கும் முதல் நாடாகும் சந்தர்ப்பம் ஸ்பெய்னில் உண்டாகி வருகிறது.
ஸ்பெய்னில் பெண்களின் உரிமை, ஆரோக்கியம் சம்பந்தமான சில சட்டங்களை நிறைவேற்றுவதற்கான மசோதாவொன்று தயாராகி வருகிறது. 16 வயதுப் பெண்கள் தமது பெற்றோரின் சம்மதமின்றே கருக்கலைப்புச் செய்துகொள்ளலாம் போன்ற சட்ட மாறுதல்களுடன் மாதவிலக்குக் காலத்தில் பெண்கள் எத்தனை நாட்களும் ஊதியத்துடன் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடப்படுகிறது.
விடுமுறை நாட்களாக மூன்று அல்லது ஐந்து நாள்கள் ஊதியத்துடன் பெண்கள் எடுத்துக்கொள்ளலாம் என்ற சர்ச்சை இருந்து வருகிறது. பெண்கள் அச்சமயத்தில் தமக்கு ஏற்படும் வேதனைக்கு ஏற்றபடி எத்தனை நாட்களும் சம்பளத்துடன் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற முடிவையே அரசாங்கம் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. மருத்துவரின் சான்றிதழுடன் கொடுக்கப்படும் அந்த விடுமுறை நாட்களுக்கான செலவை அரசின் பொதுமக்கள் காப்புறுதி ஏற்றுக்கொள்ளும்.
ஸ்பெயின் அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த மசோதா நாட்டின் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்களிப்புக்கு விடப்படவிருக்கிறது. அதற்கான படிகள் எடுத்து அச்சட்டம் நிஜமாவதற்குப் பல மாதங்களாகலாம்.
பெண்ணிய அமைப்புக்களில் ஒரு சாரார் குறிப்பிட்ட சட்டத்தை ஆதரித்தாலும் இன்னொரு பகுதியினர் “இப்படியான சட்டங்கள் பெண்களின் உடல்களில் ஏற்படும் மாறுதல்களை இயல்பாக ஏற்றுக்கொள்பவையா அல்லது அவர்களை மற்றவர்களிலிருந்து விலக்கிக் காட்டிப் பலவீனமுள்ளவர்களாகவும், தங்கி வாழ்பவர்களாகவும், வெட்கப்படவேண்டியவர்களாகவும் காட்டுகிறதா?” என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள்.
ஸ்பெய்ன் நாட்டின் தொழில் சங்கங்களும் அதே நிலைமையிலேயே இருக்கின்றன. குறிப்பிட்ட சட்டம் வேலைக்குச் செல்ல முடிவுசெய்யும் பெண்களுக்கு அனுகூலம் மட்டும் தான் கொடுக்குமா, வேலைக்கு அமர்த்துபவர்கள் இக்காரணத்தால் பெண்களை வேலைக்கு அமர்த்துவதைத் தவிர்க்கக்கூடுமா? போன்ற சர்ச்சைகள் அவர்களிடையே உண்டாகியிருக்கின்றன.
கடும் வலியுடன் கூடிய மாதவிலக்கை ஸ்பெய்னின் மூன்றிலொரு பங்கு பெண்கள் அனுபவிப்பதக நாட்டின் பெண்கள் ஆரோக்கியத் துறை வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். கடும் வயிற்றுப்போக்கு, வயிற்று நோவு, தலைவலி போன்றவையால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்