ஸ்பெயினின் தெற்கில் இரண்டு காட்டுத்தீக்கள் ஒன்றிணைந்து ஐந்தாவது நாளாகக் கட்டுக்குள்ளடங்காமல் எரிந்துகொண்டிருக்கிறது.

அண்டலுசியா மாகாணத்தில் ஐந்து நாட்களுக்கு முன்னர் காடுகளின் இரண்டு பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்திருந்தது. அத்தீக்கள் வளர்ந்து ஒன்றாகிச் சுமார் ஐந்து சதுர கி.மீ பிராந்தியத்தை வளைத்துத் தமக்கு இரையாக்கிவருவதாக ஸ்பெயின் நாட்டுத் தீயணைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர். 

எரிந்துகொண்டிருக்கும் தீ ஏற்கனவே மீட்புப் படையச் சேர்ந்த ஒருவரின் உயிரைக் குடித்துவிட்டது. சுமார் எட்டு நகரங்களில் 3,000 க்கும் அதிகமானோர் தமது வீடுகளைவிட்டுப் பாதுகாப்பாக வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். 

“இது அணைக்க முடியாத விதமான காட்டுத்தீ. இப்படியான தீக்கள் ஆரம்பிக்க விடாமல் நாம் நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இனி  மழையொன்று வந்துதான் எமக்குக் கைகொடுக்கவேண்டும்,” என்று அதன் தீவிரத்தைப் பற்றி விளக்குகிறார் காடுகள் பற்றிய ஆராய்ச்சிசெய்யும் பேராசிரியர் விக்டர் ரெஸ்கோ. ஆறு தலைமுறைகளாகவே காலநிலை அப்பகுதியில் படிப்படியாக வெம்மையாகி வருகிறது. அதன் காரணம் உலகக் காலநிலை மாற்றமே என்று அவர் உட்படப் பலரும் குறிப்பிடுகிறார்கள்.

சுமார் 41 விமானங்கள், 25 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இராப்பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பல வாரங்களாகவே அப்பகுதியில் கொதிக்கும் வெப்ப நிலை இருப்பதே இந்தத் தீ வளரக் காரணம் என்று குறிப்பிடப்படுகிறது. இதுபோன்ற அளவிலான தீயைத் தாம் இதுவரை கண்டதில்லை என்று அப்பிராந்தியத் தீயணைப்புப் படையினர் குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *