அணுஆயுதப் பரிசோதனைக் கண்காணிப்பு அமைப்பும் ஈரானும் மீண்டும் கண்காணிப்புத் திட்டத்துக்கு ஒன்றுபட்டன.

சர்வதேச ரீதியின் ஈரானுக்கு விமர்சனத்தைப் பெற்றுத்தந்தது அவர்கள் தமது அணு ஆயுத ஆராய்ச்சியைக் கண்காணிக்க மறுத்து வந்ததாகும். ஈரானின் ஆராய்ச்சி நிலையத்தில் கண்காணிப்புக் கருவியைப் பொருத்த ஈரான் மீண்டும் சர்வதேசக் கண்காணிப்பு அமைப்புக்கு [IAEA] அனுமதி கொடுத்திருக்கிறது. 

சர்வதேச ஒப்பந்தத்தில் ஈரான் இணைந்ததுக்கு ஏற்றபடி நடக்கவில்லை என்று காரணம் காட்டி டொனால்ட் டிரம்ப் உலக வல்லரசுகள் ஈரானுடன் செய்துகொண்டிருந்த ஒப்பந்தத்திலிருந்து விலகினார். அதிலிருந்து ஆரம்பித்த பிரச்சினை ஈரானுக்கெதிரான வர்த்தகக் கட்டுப்பாடுகளாகவும் ஈரானிய உயர்மட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான கட்டுப்பாடுகளாகவும் மாறியது.

அமெரிக்காவில் ஆட்சி மாறியதையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்தில் ஈரானை ஒப்பந்தத்தில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் பல முனைகளிலும் நடைபெற்று வந்தன. ஈரானில் தேர்தல் காலம் அதையடுத்து ஏற்பட்ட புதிய தலைமை ஆகியவை அது நடக்குமா இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்பியிருந்தது. 

தனது நாட்டின் அணுசக்தி ஆராய்ச்சி போர்க்கருவிகளில் அதைப் பாவிப்பது பற்றி அல்ல என்று ஈரான் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. ஈரானுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்த அணுஆயுதப் பரிசோதனைக் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரபாயேல் க்ரொஸ்ஸி ஞாயிறன்று இரவு ஜெனீவாவில் தனது பேச்சுவார்த்தைகளில் வெற்றிபெற்றதாக அறிவித்தார். ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முஹம்மது எஸ்லாமியும் பேச்சுவார்த்தைகள் நிறைவாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட கண்காணிப்புக்கு ஈரான் அனுமதிக்கும் பட்சத்தில் அவர்களை மீண்டும் அணுச்சக்தி ஆராய்ச்சி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தயார் என்று ஜோ பைடன் அறிவித்திருக்கிறார். அடுத்த கட்டமாக மீண்டும் ஈரானை 2015 ஒப்பந்தத்தில் சேர்த்துகொள்வது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடக்கவேண்டும் என்று ரபாயேல் க்ரொஸ்ஸி குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *