கத்தாரின் புலம்பெயர் தொழிலாளிகளுக்கு 440 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாகக் கொடுக்கவேண்டும் என்கிறது அம்னெஸ்டி.
இவ்வருடம் நவம்பர் மாதத்தில் கத்தாரில் ஆரம்பிக்கவிருக்கும் சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களுக்கான கட்டடப் பணி போன்றவைகளில் ஈடுபடும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு FIFA அமைப்பு சுமார் 440 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாகக் கொடுக்கவேண்டும் என்கிறது அம்னெஸ்டி இண்டர்னேஷனல். தாம் வருமானம் பெறும் இடங்களுடனான ஒப்பந்தங்களில் மிகவும் கவனமாக இருக்கும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகளை நிர்வகிக்கும் FIFA கத்தாரில் போட்டிகள் நடத்தப்படுவதற்காகத் திட்டமிட்டபோது அதற்காக வேலைசெய்யவிருந்த புலம்பெயர் தொழிலாளிகளின் நலம் பற்றி அலட்சியமாக நடந்தது என்று அம்னெஸ்டி குற்றம் சாட்டுகிறது.
சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிக் கோப்பைப் பந்தயங்களில் விளையாடப் போகும் வீரர்களுக்கு மொத்தமாகக் கொடுக்கப்படவிருக்கும் 440 மில்லியன் டொலர்களுக்கு இணையான தொகையை அங்கு மிகக் கடுமையான சூழலில் வேலைசெய்யும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் கொடுக்கவேண்டும் என்பதே அம்னெஸ்டி அமைப்பின் கோரிக்கையாகும். மனிதாபிமான அமைப்புக்கள் பலவும், உதைபந்தாட்ட விசிறிகள் அமைப்புக்களும் அம்னெஸ்டியின் கோரிக்கையை ஆதரிக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்