மேற்குச் சமவெளிப் பல்கலைகலைகழகத் தேர்தலில் ஹமாஸ் தீவிரவாத இயக்கம் பெரும் வெற்றி.
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான மேற்குச் சமவெளியில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அல் பத்தா அமைப்பு வேகமாகத் தனது பலத்தை இழந்து வருகிறது. நடத்தவேண்டிய பொதுத் தேர்தலை நடத்தாத பாலஸ்தீன ஜனாதிபதி முஹம்மது அப்பாஸ் தனது பிராந்தியத்துக்குள்ளேயே பெரும் இழப்பொன்றைச் சந்தித்திருக்கிறார். மேற்குச் சமவெளியின் முக்கிய பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கான தேர்தலில் ஹமாஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
பிர்செய்த் பல்கலைக்கழக மாணவர்கள் சபையின் 51 இடங்களில் 28 இடங்களை வென்றெடுத்தது அல் – வஃபா இஸ்லாமிய ஒன்றியம் எனப்படும் ஹமாஸ் அமைப்பின் இளைஞரணி. முஹம்மது அப்பாஸின் அல் பத்தா பெற்றது 18 இடங்களை மட்டுமே. பல்கலைக்கழக மாணவர் சபையின் உப தலைவர், கஸன் அல்-கத்தீப், “இந்தத் தேர்தல் மேற்குச் சமவெளியின் மக்களின் மனோநிலையையே பிரதிபலிக்கிறது”, என்று குறிப்பிட்டார்.
அப்பிராந்தியத்தின் பாராளுமன்றத்திற்கான தேர்தல்களை நடாத்தினால் காஸா பிராந்தியத்தைக் கைப்பற்றியது போலவே அதையும் ஹமாஸ் இயக்கத்தினரே கைப்பற்றிவிடுவார்கள் என்ற பயத்திலேயே முஹம்மது அப்பாஸ் வெவ்வேறு சாட்டுக்களைச் சொல்லித் தேர்தல்களை நடத்தாமல் இருந்து வருகிறார் என்பது இத்தேர்தலின் மூலம் ஊர்ஜிதமாகியிருக்கிறது என்று ஹமாஸ் இயக்கத்தினர் அறிக்கை விடத் தயங்கவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்