பாலியல் தொழிலும் சட்ட அங்கீகாரமும் – இன்னொரு பார்வை
எனது கடந்த பதிவில், இலங்கையில் பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரித்தல் தொடர்பாக பேசியபோது எனது இன்னொரு நண்பரும் இதே விடயத்தில் தனது கருத்தை வேறு கோணத்தில் முன் வைத்திருந்தார் என்றும் கூறியிருந்தேன். இந்தப் பதிவினை அவரது கருத்துடனேயே தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.
அவர் முன்வைத்த கருத்துக்கு பின்னணியாக அந்தக் காலப்பகுதியில் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு சம்பவமே பின்னணியாக இருந்தது. ஒரு 27 வயதுள்ள ஆண், தனது மனைவியுடன் (25 வயது) உடலுறவு தொடர்பாக சிலநாட்களாக நீடித்த தகராறினால் ஒருநாள் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். இத்தனைக்கும் அவர்களுக்குத் திருமணம் ஆகி ஐந்து மாதங்களே கடந்திருந்தன.
இது போன்ற சம்பவங்களோடு தொடர்புபடுத்தி, ஒரு தீர்வாக எனது நண்பர் கூறியதுதான் “இலங்கை போன்ற நாடுகளில் பாலியல் தொழிலைச் சட்டரீதியானதாக ஆக்க வேண்டும். அதனால், ஒரு ஆணின் பாலியல் தேவையை அவரது மனைவி பூர்த்தி செய்ய மறுக்கும்போது அல்லது பூர்த்தி செய்ய முடியாதவாராக இருக்கும்போது அந்த ஆண் தனது தேவையைப் பூர்த்தி செய்யலாம்தானே” என்ற கருத்து.
இங்கு எனது நண்பரின் பார்வையில் திருமணமான ஆண்களின் ஆசைகளை அவரது மனைவி பூர்த்தி செய்யாதபோது அந்த ஆண் விலைமாதினை நாடித் தனது தேவையைப் பூர்த்தி செய்வதே தீர்வாகும் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. எமது சமூகத்தில் வெளிப்படையாக பல ஆண்கள் இந்த விடயத்தில் வாய்திறக்காத போதிலும் பல ஆண்கள் தமது மனைவியுடனான உடலுறவு தொடர்பில் திருப்தியற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதேபோல பல பெண்களும் தமது தாம்பத்திய உறவில் முழுமையாகத் திருப்தி பெறாதவர்களாக இருக்கிறார்கள் என்பதும் உண்மையே.
உதாரணமாக இந்தியா உட்பட தெற்காசியா மற்றும் கிழக்காசிய நாடுகளில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி 57% வீதமான ஆண்கள் திருப்தியின்மையைப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தத் தரவின்படி பார்த்தால் திருப்தியற்ற ஆண்களுக்கு ஒரு வடிகால் தேவைதானே என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கைதான்.
ஆனால் அதே ஆய்வில்தான் இன்னொரு விடயமும் வெளிப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கலந்துகொண்ட பெண்களில் 64% பெண்கள், தாங்கள் தமது கணவருடனான உடலுறவில் முழுத் திருப்தியடைவதில்லை என்பதையும் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் உடலுறவுத் தேவை பூர்த்தியாகாத ஆண்களுக்காக சட்ட அங்கீகாரத்துடன் விலைமாதருக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவது போலவே உடலுறவில் திருப்தியடையாத பெண்களும் தமது சந்தோசத்திற்காக ஆண் பாலியல் தொழிலாளரின் சேவையைப் பெற்றுக் கொள்ள வசதி செய்து கொடுப்பதுதானே சரியான தீர்வாக இருக்க முடியும்?
ஆனால் அப்படி சிந்திக்கக்கூட எம்மால் முடியாது என்பதுதான் உண்மை. நான் மேலே சொன்ன விடயத்திற்கு பல பெண்களே எதிர்ப்புத் தெரிவிக்கவும் கூடும். ஏனெனில் எமது கலாச்சாரம் எம்மை அப்படித்தான் கட்டமைத்து வைத்திருக்கிறது. ஆண் செய்யும் சில விடயங்களை இலகுவாக ஏற்கும் எமது சமூகம் அதே விடயங்களைப் பெண் செய்யும்போது அதை எதிர்க்கவும் தயங்குவதில்லை. சிகரட் புகைக்கும் பழக்கத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். எமது சமூகம் சிகரட் பிடிக்கும் ஆண்களை சுலபமாக அங்கீகரிக்கும் அதேநேரம் பெண்கள் பொதுவெளியில் சிகரட் புகைக்க முயன்றால் அதை எப்படிக் கையாளும் என்பது உங்களுக்கே தெரிந்ததுதானே?
இந்த இடத்தில் நான் பகுதி ஒன்றில் பேசிய விடயம் தொடர்பாக ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். நான் அதில் இலங்கை போன்ற நாடுகளில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதில் உள்ள சவால்களைக் குறிப்பிட்டிருந்தாலும் சட்டபூர்வமாக்கக்கூடாது என்று சொல்லத் தலைப்படவில்லை. ஏனெனில் அவ்வாறு சட்டபூர்வமாக்குவது அந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு பல்வேறு வகையான பாதுகாப்பினை வழங்குகிறது. அதேநேரம் பாலியல் தொழிலாளரின் சேவையைப் பெறுபவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பை வழங்க உதவும்.
அதுமட்டுமன்றி எமது சமூகத்தில் பல்வேறு காரணங்களால் திருமணம் செய்ய முடியாமல் தனித்து வாழ்பவர்கள் அல்லது விவாகரத்தின் பின்னர் தனித்து வாழும் ஆண்கள் தமது உடற் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முடியும். இவ்வாறான ஒரு சட்டரீதியான அனுமதி இருக்குமானால், எமது சமூகத்தில் ஆண்களால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்கள், சிறுமிகள் ஓரளவுக்கேனும் தப்பிக்கொள்ளவும் சந்தர்ப்பம் உள்ளது.
ஆனால் அதனால் சமூகக் குற்றங்கள் குறைவடைந்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஏனெனில் இவ்வாறான விலைமாதரை நாட விரும்பும் ஆண்கள் வேறாகவும், சிறுமிகளை வன்புணரும் ஆசை கொண்டவர்கள் வேறாகவும் இருக்கவும் சந்தர்ப்பம் உள்ளது. அதுமட்டுமன்றி சமூகத்தில் திருமணமாகி குடும்பத்துடன் வாழும் சில ஆண்களே பிற பெண்கள், சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அப்படியானால் இதற்கு என்னதான் சரியான தீர்வாக இருக்க முடியும்? எனது பார்வையில் சில கருத்துக்களை இந்த இடத்தில் முன்வைக்கிறேன். உங்கள் கருத்தையும் பதிவிடுங்கள்.
எனது பார்வையில் ஆண் மேலானவன், பெண் அவளுக்கு அடங்கிப் போக வேண்டியவள் என்ற எண்ணக்கரு எமது சமூகத்தில் இருந்து படிப்படியாக அகற்றப்பட வேண்டும். அல்லது ஆகக் குறைந்தது ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவளின் உடலைத் தொடுதல் கோழைத்தனம் என்பதை தாய்மார் தமது ஆண் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும்.
பெண் பிள்ளைகளுக்குச் சிறுவயதில் இருந்தே தற்காப்புக்கலை ஒன்றினைக் கற்றுக் கொடுங்கள். ஆண் குழந்தைகள், பெண்குழந்தைகள் இருவருக்குமே சிறுவயதில் இருந்தே தவறான தொடுகை பற்றிச் சொல்லிக் கொடுங்கள்.
உங்கள் பிள்ளைகளைத் தவறாக கையாள எவராவது முயன்றால் சிறிதும் தயங்காது அவர்மீது நடவடிக்கை எடுங்கள். உதாரணமாக உங்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் அல்லது குடும்ப நண்பர் ஒருவர் இவ்வாறு தவறாக நடந்தால் அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுங்கள். அப்படி சட்டத்துறையை நாடுவதால் சமூகத்தில் உங்களுக்குச் சங்கடம் ஏற்படும் என்ற தயக்கம் இருந்தால் ஆகக் குறைந்தது குறித்த நபரின் குடும்பத்தாரிடம் அவரைப்பற்றி வெளிப்படுத்துங்கள். இப்படிச் செய்வது அவரைப் போன்ற நபர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்பதோடு உங்கள் பிள்ளைக்கு நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திலிருந்து மீண்டு வரவும் உதவும் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
ஆனால், திருமணமான ஆண்களுக்கு தமது மனைவியால் உடற்சுகம் கிடைக்கவில்லை என்ற நிலையில் விலைமாதை நாடாலாம் என்ற சிந்தனை பொருத்தமற்றதாகவே கருதப்பட வேண்டும். பாலியல் தொழிலை சட்டமாக்கும் விடயத்தையும் கணவன், மனைவிக்கிடையிலான உடலுறவு தொடர்பான பிரச்சனையையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது. மாறாக கணவன், மனைவி இருவருமே, ஒருவர் மற்றவரின் தேவைகள், உடல்நிலை, மனநிலை, உடலுறவு தொடர்பான புரிதல் என்பவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அதுபற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்!
எழுதுவது : மணிவண்ணன் மகாதேவா, கனடா