“பயணிகளே, நான்கு மணி நேரத்துக்கு முன்னர் விமான நிலையத்துக்கு வாருங்கள்,” என்கிறது ஆம்ஸ்டர்டாம்.
கொவிட் 19 காலத்தில் வெறிச்சோறிக் கிடந்த விமான நிலையங்கள் பல இப்போது பயணிகள் நெரிசலால் எள் போட்டால் எண்ணெயாகும் நிலைமைக்கு வந்திருக்கின்றன. பெருமளவு பயணிகள் பயணம் செய்வதில் ஐரோப்பாவின் இரண்டாவது இடத்திலிருக்கும் ஷிபோல், ஆம்ஸ்டர்டாம் மூலம் பயணிக்கிறவர்களை, நான்கு மணி நேரத்துக்கு முன்னரே அங்கே வந்துவிடுமாறு வேண்டிக்கொண்டிருக்கிறது விமான நிலைய நிர்வாகம்.
ஷிபோல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனைகள், ஒழுங்கு முறைகள் போன்ற அனைத்துமே அதிகாரிகளின் கட்டுப்பாடுகளை இழந்துவிடக் கூடிய நிலைமையை எட்டிகொண்டிருக்கின்றன. ஐரோப்பாவின் மற்றைய விமான நிலையங்களிலிருந்தும் இதே போன்ற நிலைமை பற்றிய எச்சரிக்கைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
சமீப வாரங்களில் கோடைகால விடுமுறைக்காக பயணிகள் தொகை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. கொரோனாத்தொற்றுக்களின் காலத்துக்கு முன்னைய அளவுக்கு எண்ணிக்கை அதிகரிக்காவிட்டாலும் கூடக் கடந்த வருடத்தை விட அதிகமானோர் விமானப் பயணச்சீட்டுக்களை வாங்கியிருப்பதாக சுற்றுலா நிறுவனங்கள் மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டிருக்கும்போது விமான நிலையங்களின் நெரிசல்கள் நாடுகளின் அரசியல் பிரச்சினையாகியிருக்கின்றன.
விமான நிலையங்களில் ஊழியர்களின் தொகை பெருமளவு குறைந்திருப்பதே ஏற்பட்டிருக்கும் நிலைமைக்கான ஆணிவேராகச் சுட்டிக் காட்டப்படுகிறது. விமான நிலைய அதிகாரங்கள் இப்படியான நிலைமையை எண்ணிப் பார்க்காததால் சரியான சமயத்தில் தேவையான ஊழியர்களை வேலைக்கமர்த்தவில்லை. விமான நிலைய ஊழியர்களை வேலைக்கு அமர்த்த முதல் நாட்டின் பொலீஸ், இரகசியப் பொலீஸ் ஆகியோரால் அவர்களுடைய பின்னணி கடுமையாக ஆராயப்படுகிறது. அதைச் செய்வதற்குரிய ஊழியர்களும் தேவையான அளவு இல்லை. எனவே ஒருவரை வேலைக்கமர்த்தி அவர் தனது வேலையை ஏற்றுக்கொள்ள முதல் நடக்கும் பின்னணி பற்றிய ஆராய்வுகள் முடியவே சுமார் இரண்டு மாதங்கள் எடுப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஷிபோல் விமான நிலைய ஊழியர்கள் தமது பணியாற்றும் சூழல் கடுமையான மன உழைச்சல்களையும், பாதுகாப்பின்மையையும் உண்டாக்கியிருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். எனவே, அரசு உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் வரவிருக்கும் வாரத்தில் வேலை நிறுத்தத்தில் குதிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். விமான நிலைய உயர் நிர்வாகி பாராளுமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார். விமான நிலையத்தின் ஒழுங்கு நிலைமை மோசமாகியிருக்கும் கட்டத்தில் அவர் பல தடவைகள் வெளிநாடுகளுக்கு ஏன் சென்றார் என்பதற்கான பதிலை பாராளுமன்றம் எதிர்பார்க்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்