மின்சாரத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கம் ஒன்றைத் திறக்கவிருக்கிறது இந்தியா.

இந்திய அரசின் நிறுவனமான Coal India ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கம் ஒன்றைத் திறக்கவிருக்கிறது. ஒடிஸ்ஸா மாநிலத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் திறக்கப்படவிருக்கும் அந்தச் சுரங்கம் ஆரம்பத்தில் வருடாந்திரம் 2 – 5 மில்லியன் தொன் நிலக்கரியைத் தயாரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

சுற்றுப்புற சூழல் மாசுபடுதலைக் குறைப்பதற்காகத் தனது நிலக்கரிப் பாவிப்பை, இறக்குமதியைக் குறைக்கவேண்டும் என்று இந்திய அரசு திட்டமிட்டிருந்தது. இறக்குமதி குறைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இவ்வருடம் நாடு மிகக் கடுமையான வெப்ப அலையை எதிர்கொள்கிறது. அதனால் மின்சாரப் பாவனை பெருமளவில் அதிகரித்து, நாடெங்கும் மின்சாரம் தேவையான அளவில் கிடைக்கவில்லை. பல நகரங்களில் தினசரி பல மணி நேரம் மின்சாரம் வெட்டப்படுகிறது. இதனால், மூடப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்கள் சிலவற்றை மீண்டும் திறப்பதுடன், புதிய நிலக்கரிச் சுரங்கங்களைத் திறக்கவும் இந்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

இந்தியாவின் பெருமளவு மின்சாரத் தயாரிப்பு நிலக்கரிப் பாவிப்பாவனை செய்யும் மையங்களிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அரசின் நிலக்கரிச் சுரங்கங்கள் மூலம் தற்போது 700 மில்லியன் தொன் நிலக்கரி எடுக்கப்படுகிறது. அது மேலும் மூன்று வருடங்களில் 1 பில்லியன் தொன்னாக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. நாட்டுத் தேவைக்கான நிலக்கரியின் சுமார் 80 விகிதத்தை அரசின் சுரங்கங்களே தயாரிக்கின்றன.

அதிகரிக்கப்படும் நிலக்கரிப் பாவனையால் இந்தியா குறிவைத்திருக்கும் சூழல் மாசுபாடு குறைத்தல் அளவைக் குறிப்பிட்ட காலத்தில் எட்ட முடியுமா என்பது கேள்விக்குறியே. ஆனாலும், விரைவில் சூழலைப் பாவிக்காத முறையில் தயாரிக்கப்படும் மின்சக்தி அளவை அதிகரிப்பதற்குப் போட்டிருக்கும் குறியை இந்தியா அடையும் என்று அரசு உறுதியாக இருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *