கிலோவுக்கு ஒரு ரூபா தான் கிடைக்குமென்று உத்தர்பிரதேச விவசாயி தனது காலிபிளவர் விளைச்சலை அழித்தார்.

உத்தர்பிரதேசத்தில் ஷம்லியில் மாயாபுரி என்ற கிராமத்து விவசாயி ஒருத்தர் தான் விளைவித்த ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான காலிபிளவரை அழித்துவிட்டார். அதன் கிலோ விற்பனை விலை ஒரு ரூபாயாக இருப்பதாகவும் அது தனது தயாரிப்புச் செலவை விடக் குறைவும் என்பதே அதற்குக் காரணமாகும்.

நடந்துகொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்தின் கருத்தைத் தான் ஆதரிப்பதாகவும், அரசு ஏற்கனவே விலை நிர்ணயித்துக் கொள்வனவு உறுதி தராவிட்டால் தாம் விளைவிப்பதை விற்று இலாபம் பெறமுடியாதென்றும் அவ்விவசாயி தெரிவித்திருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் பீஹாரில் முக்தாபூர் கிராமத்திலும் இதேபோன்று ஒரு விவசாயி தனது மூன்று ஏக்கர் நிலத்திலிருந்த காலிபிளவரை அழித்ததாகச் செய்திகள் வந்திருந்தன. 100 கிலோ காலிபிளவரை அறுவடை செய்வதற்குச் செலவழிக்கவேண்டிய செலவுகூட அதை விற்றுப் பெற்றுக்கொள்ள முடியாது என்று அந்த விவசாயி குறிப்பிட்டிருந்தார்.  சாதாரணமாக 100 கிலோவின் விலை 700 – 1500 ரூபாய்களாக இருக்குமென்றும் கொரோனாக்கால நிலபரங்களால் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் அவ்விவசாயி குறிப்பிட்டிருந்தார். ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய்களைக் குத்தகையாகச் செலுத்தி ஒரு லட்சம் ரூபாய்கள் செலவழித்து அந்த நிலத்தில் காலிபிளவர் பயிரிட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பிட்ட விவசாயியின் செயல் நீதிமன்றத்துக்கு எட்டியிருக்கிறது. அப்பிரதேச நீதிபதி ஜஸ்ஜித் கௌர் விவசாயியைச் சந்தித்து விபரங்கள் சேகரிக்க ஆள் அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதன் பின் விவசாயியின் செயலுக்கான நடவடிக்கைகள் என்னவென்று தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *