கடலின் கீழான தொடர்புகள் மூலம் எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்கு மின்சாரம்.
ரஷ்ய எரிபொருட்களில் தனது பொருளாதாரத்துக்குத் தங்கியிருந்த ஐரோப்பிய நாடுகள் அதிலிருந்து விடுபட பற்பல மாற்று வழிகளிலும் முதலீடு செய்து வருகின்றன. அவைகளிலொன்று எகிப்திலிருந்து கிரீஸ் மூலமாகக் கடலுக்குக் கீழாகப் போடப்படவிருக்கும் மின்சாரத் தொடர்புகளாகும். அதன் மூலம் ஐரோப்பாவின் மேலுமொரு முக்கிய கொள்கையான சூழலுக்குப் பாதிப்பில்லாத எரிசக்தியும் கிடைக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.
சுமார் 3,000 மெகாவாட் மின்சாரத்தை அதன் மூலம் எகிப்திலிருந்து கிரீஸில் அட்டிகா நகர்வரை கொண்டுசெல்லவிருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுத்தேவைக்கான திட்டம் என்ற முதலீடுகள் மூலம் 3.5 பில்லியன் டொலர் இதற்காகப் பாவிக்கப்படும்.
லிபியா, சவூதி அரேபியா, சூடான் ஆகிய நாடுகளுடன் தனது மின்சாரத் தொடர்புகளை ஏற்கனவே இணைத்துள்ளது எகிப்து. காற்று, சூரிய சக்தி ஆகியவற்றின் மூலம் எகிப்து மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூன்றிலொரு பகுதி கிரீஸில் தொழிற்சாலைகளுக்காகப் பாவிக்கப்படும். மேலதிக எரிசக்தியானது பக்கத்திலுள்ள மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்