சிரிப்பதும் பயிற்சியாம் |அது தெரியுமா உங்களுக்கு ?
இன்றைக்கு பலர் ஒன்று கூடி சிரிப்பதை பயிற்சியாக மேற்கொள்கின்றனரே அது ஏன் தெரியுமா?
‘சிரிப்பு’ மனிதனுடன் கூடிப் பிறந்த ஓர் உணர்வின் வெளிப்பாடு பல வித ஒலிகளுடன் மகிழ்ச்சியை தெரிவிப்பது. அதை அடக்குவது மனிதப் பண்பை அழிப்பதாகும்.
இந்த சமுதாயம் நீங்கள் தீவிரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. கடந்த காலம் நம் வாழ்வை முடக்கி சிரிப்பை மறந்த மனிதர்களாக மாற்றி விட்டது.
உதாரணத்துக்கு ஆசிரியர் பாடம் கற்பிக்கும் போதோ, பெற்றோர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும் போதோ சிரித்தால் அவ மரியாதையாக கருதப்படும் என்று சொல்லி வளர்த்தது.
தீவிரமாக இருப்பது மரியாதை என்று எண்ணப்படுகிறது. வாழ்க்கை என்றால் அன்பு, சிரிப்பு, ஆடல், பாடல் என்று கலந்தது தானே.
ஒரு நல்ல மனிதனின் அடிப்படைத் தன்மை நகைச்சுவை உணர்வுடன் இருக்க வேண்டும். சிரிப்பும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடிய ஓர் உணர்வு இந்த கொட்டாவி போல.. பலர் குழுமியுள்ள இடத்தில் ஒருவர் சிரித்தால் அதைப் பார்த்து பலர் சிரிக்க வாய்ப்புள்ளது.
கவனித்துப் பாருங்கள் நாம் மற்றவர்கள் கூறுவதை ஆமோதிக்கும் போது லேசாகச் சிரிப்போம் இதற்குக் காரணம் அவர்கள் கூறும் விஷயத்தை நாமும் நினைவுபடுத்திக் கொள்கிறோம் என்று பொருள்.
சிரிப்பானது மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
வாய் விட்டு சிரிப்பதால் உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன. குறிப்பாக முகத்திலுள்ள தசைகளும்,
நெஞ்சுத் தசைகளும் ஆழமாக மூச்சை உள் இழுப்பதால் கூடிய அளவு ஒக்சிசனை உள்வாங்கி அதனால் நோயெதிர்ப்பு சக்தி கூடி உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது.
எனவே சிரிக்கும் போது நிம்மதியாக உணர்வீர்கள் என்பது பேருண்மை.
சிரி்ப்பின் மகத்தான அழகு உங்களை
லேசாக்கி பறக்க சிறகுகளைத் தரும்.
பிறரும் சிரிக்க வாய்ப்புகளை உருவாக்குவோம். நீங்கள் சிரிப்பதைப் போல நடித்தாலுமே இத்தகைய அனைத்து நன்மைகளும் உடலுக்கு ஏற்படும்.
ஆகவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சத்தமாக சிரிப்பதை மறந்து விடாதீர்கள்.
எழுதுவது : பிரமிளா நாகேஷ்வரராஜ்