தடைகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்…

வாழ்க்கை என்னும் பாதையில் பெரிய குழியில் தடுக்கி விழுந்தாலும், “இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல், குழியில் இருந்து மேலே வருவது எப்படி என்று எண்ண வேண்டும்…

இடையூறுகள், ஐயப்பாடுகள், துன்ப துயரங்கள் போன்றவை எல்லா மனித வாழ்விலும் வருவது இயல்பானதுதான்.

ஆனால்!, சிலர் அதிலே துவண்டு வாடி விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தோல்வியைத் தழுவுவது தவிர்க்க முடியாதது…

ஆனால்!, வெற்றியாளர்கள் எத்தகைய இக்கட்டான சூழலையும் கடந்து போய்விடுகிறார்கள்…

எதையாவது சாதிக்கும் முயற்சியில் இறங்கினால், தடைகள் உறுதியாக குறுக்கிடத்தான் செய்யும்.

எல்லோருக்கும் இப்படி நேர்ந்திருக்கும். ஆனால்!, அந்தத் தடைகள் நம் பயணத்தை நிறுத்தி விடக்கூடாது…

பாதையில் சுவர் குறுக்கிட்டால், ஓட்டத்தை நிறுத்திவிட்டு திரும்பிப் போகக்கூடாது, அதைத் தாண்டிப்போவது எப்படி என கண்டுபிடிக்க வேண்டும்…

வெற்றி எல்லாம் எடுத்தவுடன் கிடைத்து விடுவதில்லை.

இடையிடையே தடைகள், மனச் சோர்வை உண்டாக்கக் கூடிய நிகழ்ச்சிகள், இன்னபிற சிக்கல்களெல்லாம் ஏற்படும்…

அதனால் தளர்ச்சி கொள்ளக் கூடாது.

நமக்கு ஏற்படும் தடைகள்தான் நம்மை நின்று நிதானித்துச் சிந்திக்கச் செய்கின்றன…

அடுத்த அடியை எப்படி எவ்வளவு அழுத்தத்தோடு எடுத்து வைக்க வேண்டும் என்பதற்கு அத்தகைய தடைகள்கூட நமக்குத் தேவைதான்…

வெற்றி பெற்றவர்களைக் கேட்டுப் பாருங்கள்.

அப்பப்பா!, என்னுடைய முன்னேற்றத்துக்குத் தான் எத்தனை தடைகள்…? இருந்தாலும் நான் மனம் தளரவில்லை. சளைக்காமல் முயன்றேன்.

அதனால் தான் இன்று இந்த நிலையில் வாழ்கிறேன் என்பார்கள்…

பயணம் செய்யும்போது வழியில் கல்லும் முள்ளும் இருக்கத்தான் செய்யும். நாம்தான் பார்த்து நடக்க வேண்டும்.

தவறிப்போய் முள் குத்தினாலும் அதைப் பிடுங்கி எறிந்துவிட்டு பயணத்தை தொடரவேண்டியதுதான்…

அதற்காக அங்கேயே அமர்ந்துவிடுகிறோமா…? என்ன…!?

நம்மை தொல்லைகள், துன்பங்கள், தடைகள் குறுக்கிடும்போது துவண்டு விடாதீர்கள். அதுதான் வாழ்க்கை என்று உங்கள் திறமைகளுக்கு நீங்களே முற்றுப் புள்ளி வைக்காதீர்கள்…!

அதையும் மீறி நம்மால் முடியும், எதிர்கொள்ள முடியும் என்ற மனவுறுதியுடன் சிகரத்தினை நோக்கி சலிப்பின்றி பயணம் செய்யுங்கள்…!!

எந்தத் தடைகளுக்கும் அஞ்சாதீர்கள். அவற்றை வரவேற்று கொண்டாடுங்கள்.

ஏனெனில்!, தடைகள்தான் உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும்.

நெருக்கடியான காலகட்டம்தான் மிகச் சிறந்த மனிதனை அடையாளம் காட்டுகின்றன…!!!

கவனத்துடன் படிப்படியாக முன்னேறும் மனிதன்; தான் ;

மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகிறான்….

முனைவர் மண்ணச்சநல்லூர் பாலசந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *