மாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்

ஆசிரியர் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து உலகமெங்கும் தன் மாணவர்களின் சிறப்பான வளர்ச்சியால் பெருமையுற்று எம்மோடு வாழ்ந்த ஆசிரியர் வல்லிபுரம் அவர்களை மறக்கமுடியாது.

செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்ந்து கொண்டு “ஆசிரியர்” என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக  வாழ்ந்து காட்டியவர் தான் ஆசிரியர் சின்னையா வல்லிபுரம் அவர்கள்.

ஆரம்பக்கல்வியே வாழ்க்கையில் அடிப்படைக்கல்வி என்பது யாவரும் அறிந்ததே.அந்த கல்வியை மாணவன் எவ்வாறு பெற்றுக்கொள்கின்றானோ அதுவே அவனை சீரிய பாதையில் வழிகாட்டிச்செல்லும்  என்பது உண்மைதான்.அதை ஆசிரியர் செவ்வனே அறிந்து மாணவர்களை வழிநடத்துவார்.

சிறுபராயம் முதலே மாணவர்கள் பணிவுடனும்,பண்புடனும் அதேவேளை போட்டி மனப்பானமையுடனும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்வி கற்பிப்பவர் ஆசிரியர் அவர்கள்.

ஆசிரியர் ஐந்தாந்தர புலமை பரீட்சையில் மாணவர்களை தயார்ப்படுத்தும் பெரும் பணியினை கையிலெடுத்து அதில் வெற்றியும் கண்டவர் ஆசிரியர் வல்லிபுரம் அவர்கள்.

ஆசிரியர் அவர்கள் அவ்வப்போது மாணவர்களுக்காக வைக்கும் பரீட்சைகளில் மாணவர்கள் கூடுதல் புள்ளிகள் பெற மிகவும் பிராயத்தனதொடு கற்பார்கள்.

ஆசிரியர் சின்னையா வல்லிபுரம் அவர்கள் அதிபராக பணிசெய்து வந்திருந்தாலும் ஆசிரியராக இருந்து கிடைக்கும் மகிழ்ச்சியே தனி என்று சொல்பவர்.

மாணவர்களின் மகிழ்ச்சியில் அவர் மகிழ்ந்திருப்பார். ஆசிரியரின் மாணவர்கள் பல்வேறு நாடுகளிலும் மிகச்சிறந்த பதவிகளில் கடைமை ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.அந்த பெருமை அவருக்கு இறுதிக்காலம் வரை நிலைத்திருந்தது.

நான் அறிந்த வகையில் அதிபராக பணிபுரிந்த காலங்களில் கரணவாய் மணியகாரன் தோட்டம் வித்தியாலயத்தின் காலங்கள் அவரின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.அவ்வூர் மக்களோடு மக்களாக சேர்ந்து பாடசாலையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஆசிரியர் வல்லிபுரம் அவர்கள். அண்மைய ஊர்களிலிருந்தே பலரை அந்தப்பாடசாலையின் விசேட தினங்களுக்கு அழைத்துச்சென்று அந்த மாணவர்களை உற்சாகப்படுத்துவார். அந்தளவு மாணவர்களை உற்சாகப்படுத்தும் மகிழ்ச்சியில் அவரின் உத்வேகமான பணி இருக்கும்.

ஆசிரியராக ,அதிபராக சேவை உள்ளம் கொண்டவராக இருந்து 2008 ம் ஆண்டு ஆவணி மாதம் இரண்டாம் தேதி தனது அறுபதாவது வயதில்  தனது அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.ஓய்வு பெற்றாலும் தனது ஆசிரியப்பணியை தொடர்ந்தும் செய்துவந்தார்.கற்பித்து மாணவர்கள் அடையும் வளச்சியில் அதில் அவர்கள் பெறும் மகிழ்ச்சியில் தானும் மகிழ்வுறுவார்.

அன்றைய காலங்களில் வடபுலம் யாழ்ப்பாணம் கரவெட்டிக்கு செல்லும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தபோது ஆசிரியர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அப்போதும் கூட அவர் தன்னை நம்பி வீடு வரும் மாணவர்களை விட்டுவிட்டு தனது சொந்த தேவைக்காக வெளிமாவடடங்கள் செல்வதையெல்லாம் தவிர்த்துவருவதாக குறிப்பிட்டார். அப்படியாக மாணவர் மீது அக்கறை கொள்ளும் ஆசிரியர் ஒருவரிடம் கல்விகற்றேன் என்ற பெருமை எனக்கு மட்டுமல்ல உலகமெங்கும் பரந்து வாழும் அவரின் சிறப்பான மாணவர்களுக்கும் என்றும் இருக்கும்.

ஆசிரியரின் பெருமைகள் அவரின் பெயரும் புகழும் அவரின் மாணவர்களால் என்றும் சிறப்புறும்.இன்றும் உலகமெங்கும் உள்ள அவரின் மாணவர்களால் மறக்கப்படமுடியாத ஆசிரியராக அவர் மிளிர்கிறார் என்றால் மிகையாகாது.

எழுதுவது : கரவைக்குரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *