கடத்தல் | பிள்ளைகள் மீது மிகக்கவனம்

பெற்றோர்களே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது

இலங்கையிலுள்ள பெற்றார் அனைவரும் தமது பிள்ளைகள் மட்டில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் பெற்றோர் பிள்ளைகளின் பாதுகாப்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வது, தனியார் வகுப்புக்களுக்குச் செல்வது மற்றும் வேறு எங்கு சென்றாலும் அவர்கள் வீட்டிலிருந்து சென்று மீண்டும் திரும்பி வரும் வரையில் அவர்களுடைய பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது மிக முக்கியமானதாகும்.

தற்சமயம் இலங்கையில் இம்மூன்று பிரச்சினைகளும் நம்பமுடியாத வகையில் நடந்து கொண்டிருப்பதை அறியலாம். வாகனங்களில் பிள்ளைகளைக் கடத்துகின்ற சம்பவங்கள் பல காலங்களின் பின்னர் மீண்டும் சில நாட்களாக அதிகரித்துள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பாக தலைமன்னாரில் இரண்டு பெண் சிறுமிகளை கடத்த முயன்றதாகவும் அதன்பின் அங்கிருந்த கிராம மக்களால் காப்பாற்றப்பட்டதாகவும், களுத்துறை மாவட்டத்தில் ஒரு பாடசாலையின் கணித ஆசிரியரால் 16 பெண்பிள்ளைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும், மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகின்றதுமான கொடிய சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

எனவே, அழிவடைந்து கொண்டிருக்கும் இளம் சமுதாயத்தினர் மட்டில் பொலிசார் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கள் போன்றன தம்மாலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் ஒவ்வொரு பிள்ளையின் மீதும் பெற்றோர்கள் அவதானமாக இருப்பது அவசியமானதாகும்.

பிள்ளைகள் எங்கே? ஏன் ? யாருடன்? எந்த நேரம் செல்கின்றார்கள்? என்பன தொடர்பாக விளிப்பாயிருங்கள். பிள்ளையுடன் சிறிய நேரம் உரையாடி அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக அவதானத்தைப் பெற்றிடுங்கள்.

உங்களுடைய பிள்ளைகளின் பாதுகாப்பு உங்கள் கைகளில் மட்டுமே உள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருங்கள்.

எழுதுவது : டிலக்ஸி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *