வினாடிகளையும் தோற்கடிக்கும் இவை..!
தொலைப்பேசியும் மக்களும்.
வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்
காதலில்லாத என் கைபேசியை..!
.
எழுத்துப் பலகைகள்
தேயப்பெற்ற காலம்போய்
எப்போதும் உறங்குகிறது..
நீ அழையாத என் பேசி.
.
எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்
நம் பழைய குறுஞ்செய்திகளை..!
.
கவிதைகள் இல்லையெனினும்
காதலின் அடையாளங்கள் அழகாய்..!
.
வினாடிகளையும் தோற்கடிக்கும்
நம் அடுத்தடுத்த பதில் பறிமாற்றங்கள்..
ஒவ்வொரு நாளின்
தொடக்கமும் முடிவும்
முடிவில்லாமல்..!
.
நினைத்துப் பார்க்கிறேன்..
நேரமறியாத நள்ளிரவுகளில்
காதுமடல் சுட்டதையும்
கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும்
பொருட்படுத்தாது நீண்டுபோன
நமக்கான உரையாடல்களை..!
.
சொல்ல மறந்துவிட்டேனென..
சொன்னது கேட்கவில்லையென..
இப்போதுதான் நடந்ததென..
யாரோ சொன்னதென..
எத்தனை எத்தனையோ சாக்குகள்.
நம் குரல் கேட்க ப்ரயோகித்தோம்..!
.
காத்திருப்பு ஒலியிருப்பின்..
ஒருவருக்கொருவர்
செல்லமாய்க் கோபித்து
சிரிக்காமல் சீண்டுவோம்..
சிணுங்கியபின் சிக்கிடுவோம்..
சமாதானம் எனும் சிறையில்..!
.
பேசிக்கொண்டே ஓர்முறை
நானுறங்கிப்போக..
துண்டிக்க மனமில்லையென
தொடர்ந்து கொஞ்சினாய்
என் மௌனத்தை..!
உஷா வரதராஜன்.
பெங்களூர்