இராமர் கோவில் சொல்லும் செய்தி
இடிக்கப்பட வேண்டிய மதவாதமும் கட்டி எழுப்பப்பட வேண்டிய நல்லிணக்கமும்.
எழுதுவது சுவர்ணலதா
கோவில்கள், கும்பாபிசேகம், திருவிழாக்கள் என்பன கோலாகலமாக நடைபெறுகின்றன. அந்த நாட்டினர் ஏனைய கலாச்சாரங்களை மற்றும் மதங்களை மதிக்கின்றார்கள். மனிதம் என்பது மனிதர்களைச் சரி சமமாக மதித்தலும் இணக்கத்துடன் வாழ்தலுமே ஆகும். இந்தியப் பிரதமரே தலைமை தாங்கி பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டு இடிக்கப்பட்ட பள்ளிவாசல் இருந்த இடத்தில் இராமர் கோவிலை கட்டியிருக்கின்றார். மக்கள் மத்தியில் இது முறுகலையே விளைவிக்கும். எங்களுக்குச் சில கலாச்சாரங்களைப் பின்பற்றுபவர்களை தனிப்பட்ட ரீதியில் சகிக்க முடியாமல் இருக்கலாம். எல்லோரும் சமமாய் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதே ஓர் நாட்டின் பிரதான ஜனநாயகப் பண்பாகும். ஒரு நாட்டின் இறைமையும் மதசார்பின்மையும் தான் அந்த நாட்டினை வழிப்படுத்துகின்றது.
மதங்கள் என்பன அவரவரது தனிப்பட்ட நம்பிக்கையாகும். அவ் நம்பிக்கைகளை அரசியல் ஆயுதமாக பாவிக்கும் நாடுகளுக்கு என்ன கதி நிகழ்ந்திருக்கின்றது என்பதை வரலாற்றின் வாயிலாக ஏற்கனவே அறிந்திருக்கிறோம். இந்த விடயத்தைப் பற்றி நாம் பேசும் போது குறைந்த பட்ச அரசியல் நேர்மையோடு தன்னும் அணுக வேண்டும். காலாகாலங்களுக்கு முன்னாலும் மசூதிகள் இடிக்கப்பட்டன , கோவில்கள் கட்டப்பட்டன, கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிக்கப்பட்டன, பள்ளிவாசல்கள் எழுந்தன எனும் வாதப்பிரதிவாதங்களுக்கான தளம் இதுவல்ல. குரங்கில் இருந்து மனிதன் கூர்ப்படைந்தான், மறுபடி குரங்காதல் எவ்வாறு நகைப்பாய் உள்ளதோ நாகரீகமற்ற செயல்களும் ஏற்பற்றதேயாகும். உலகம் கிராமமாகி விட்ட இன்றைய வாழ்வியல் முறையில் மனிதர்கள் நேசக்கரங்கள் நீட்டி அனைத்துப் பண்பாடுகளையும் ஏற்று மதித்து வாழ்தலே நன்மை பயக்கும்.