எழுத்து சித்தன் பாலகுமாரன்..!
எழுத்துச்சித்தன் பாலகுமாரன்…
புத்தகம் தொட்டவுடன் புத்தி படிக்கும் வெறிகொள்ளும்…
பதினைந்து வயதில் அவரை வாசிக்க துவங்கியது இருபத்தி ஐந்து வயதில் பித்து பிடிக்க வைத்தது…முப்பது வயதில் வாசிப்பு நிறைவாய் இருக்கிறது படித்தது போதும் என உள்ளே ஒன்று நிறுத்த சொல்லி மனம் படிப்பதை நிறுத்திவிட்டது….
அண்ணே இந்த மாசம் பல்சுவை நாவல் வந்துடுச்சா…இல்லப்பா.அண்ணே நாவல் லீடர்…இல்லப்பா இன்னும் வரல…இப்பிடி நாலு கடைல கேட்டு இல்லைன்னு சொன்னாதான் மனம் அமைதி ஆகும்…புத்தகம் வெளிவந்து வாங்கும் வரை புத்தி எழுத்துக்கு அலையும்…பழைய புத்தக கடையில் படிக்காத கதை எதேனும் இருக்கிறதா என தேட சொல்லும்…
படித்ததையே திரும்ப திரும்ப படிக்கச்சொல்லும்…
எத்தனை போதை அந்த எழுத்துக்களுக்கு…ஒரு ஆழ்ந்த
போதையில் நடந்த எதுவும் நினைவில் இருக்காது. ஆனால் அந்த போதை உணர்வில் பதிந்து கிடக்கும் மீண்டும் தேடித்தேடி போக தூண்டும்…
கிட்டத்தட்ட அத்தனை நாவல்களையும் வாசித்திருப்பேன் ஒரு கதைகூட நினைவில் இல்லை ஒரு வார்த்தை கூட புத்தியில் இல்லை ஆனால் அதன் சாரம் அதன் வீச்சு அந்த எழுத்தின் வன்மை உள்ளே உயிரின் உள்ளே அடி ஆழத்தில் தகதகவென நெருப்புக் கங்குகளாய் இன்னும் கனன்று கொண்டிருக்கிறது…
அவ்வப்போது என் எழுத்துக்களில் அது பற்றி எரியவும் செய்திருக்கிறது…
வெறி பிடித்த எழுத்து…
வெறி பிடித்த வாசிப்பு…
எழுத்தாளனுக்கும் வாசிப்பாளனுக்கும் இடையில் ஒரு மெல்லிய சிநேகம் இரவில் ஒலை கூரையில் வைத்த பாஸ்பரஸ் விடியல் உதயத்தில் சந்தடியின்றி பற்றி எரிவதைபோல் எரியும்…
வாசிக்க வாசிக்க யோவ் யாருய்யா நீ எங்க இருந்து யா வந்த…
என்ன எழுத்து யா இது என மனம் ஹோவென கூச்சலிடும்…
சாகுறவரை நீ எழுதணும் யா….
சாகுறவரை நான் வாசிக்கனும் யா மனம் கைகூப்பி தொழும்
அவர் ஒரு மழையை விவரிக்க துவங்கினாள் இங்கு தொப்பலாக நனைந்திருப்போம்….
ஒரு காதலை விவரிக்க துவங்கினாள் இங்கு சிறகு முளைத்து பறக்க துவங்கி இருப்போம்…
ஒரு போரை விவரிக்க துவங்கினாள் எதிரியின் தலை கொய்யப்பட்டு சட்டென்று முகத்தில் உதிரம் தெளித்தது போல ஒரு திடுக்கிடல் தோன்றும்…
அவரை நான் வாசிக்கும் முன் சிலர் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் அவரை வாசித்தபின் வேறெதையும் வாசித்ததில்லை…
வாசிக்க இயலவில்லை ஏதோ என்னை வசீகரிக்கும் ஒன்று மற்ற எழுத்துக்களில் காணவில்லை…
அந்த எழுத்தின் சத்தியம் ஆயிரம் மனிதர்களை நீயும் இப்படித்தானே என தலை குனிய வைக்கும்…
அந்த எழுத்தின் வீரம் ஓராயிரம் மனிதர்களை கொன்று குவிக்கும்…
அந்த எழுத்தின் ஈரம் லட்சம் ஆலம் விதைகளை சடுதியில் முளைக்க வைக்கும்…
என்ன கற்றுத்தந்தது…
அன்பை,நேசத்தை, காதலை,கூடலை, பெண்ணியத்தை, கண்ணியத்தை, நேர்மையை, தைரியத்தை,பொறுமையை,
தியானத்தை,கடவுளை,கருணையை போதித்தது…
கடவுளின் மனம் அவனுக்கு…
தேவதையின் கைகள் அவனுக்கு…
அமுதசுரபியை போல எழுத்துக்கள் வடிந்துகொண்டே இருக்கும் அவன் விரலிடுக்கில் சிக்கிக்கொண்ட கணையாழியிலிருந்து…
ஒரு முறை வாசித்து பாருங்கள் அது வாழ்வின் இறுதிவரை தித்திக்கும்…
வெட்ட வெட்ட சிந்திய உதிரத்தில் இருந்து முளைத்தெழும் அசுரன் அவன்…
எங்கு எந்தெந்த வார்த்தைகளில் உயிர்ப்பை சந்திக்கிரீர்களோ அங்கெல்லாம் உயிர்த்தெழும்
அசுரன் அவன்…
இறந்தவர்களுக்கு மட்டுமே நினைவு தினம் உயிரின் உள்ளே இன்னும் கத கதப்பாய் வாழ்ந்து கொண்டு இருப்பவனுக்கல்ல…
எழுதுவது முனைவர் ரவிச்சந்திரன்