இணைப்பாடவிதானங்களில் மிளிர்ந்த மாணவனுக்கு மேலதிக Z புள்ளிகள்|மருத்துவ பீடத்திற்கு வாய்ப்பு
பாடசாலைக்காலங்களில் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மிளிர்ந்த இரு மாணவர்களுக்கு பல்கலைக் கழகத் தெரிவிற்காக Z புள்ளிகளுக்கு மேலதிகமாக புள்ளிகளை வழங்கி மருத்துவபீட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த அறிவிப்பை விடுத்த யாழ் இந்துக்கல்லூரி அதிபர் செந்தில்மாறன், யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து அந்த வாய்ப்பை மாணவன் து.பிரசாந்தன் பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .
கடந்த 2022 ம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 99 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகியிருந்தனர். அதைவிட மேலதிகமாக இருவர் விசேட வகையில் தெரிவு செய்யப்பட்டனர்.
நேர்முகத்தேர்வில் உயர்தரப்பரீட்சையில் பெற்ற அடைவுகள் பிரதானமாக கொள்ளப்பட்டாலும் பாடசாலைக் கால இணைப்பாடவிதான அடைவுகள் மற்றும் ஆளுமைத்திறன் அனைத்தும் கருத்திற்கொண்டு நோக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலையால் வழங்கப்பட்ட நற்சான்றுப் பத்திரம், மற்றும் மாணவர் முதல்வர் சபையால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களும் கருத்திற் கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
பாடசாலைக்காலங்களில் சகல துறைகளிலும் பாடசாலை மட்டம் முதல் அகில இலங்கை ரீதியாக மிளிர்ந்த மாணவனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இத்தகைய ஆளுமைத்திறனை வெளிப்படுத்தி யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து க.பொ.த உயர்தரம் 2022 உயிரியல் பிரிவு மாணவனுக்கு ஊவா வெல்லச பல்கலைக் கழக மருத்துவ பீடம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் மேற்படி விடயங்களைக் கருத்திற் கொண்டு இணைப்பாடவிதானத்தில் கவனமெடுத்து தங்களது ஆளுமைத் திறனை உறுதி செய்து கொள்ளல் வேண்டும் என யாழ் இந்துக்கல்லூரி அதிபர் திரு.இ.செந்தில்மாறன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.