பிரான்ஸில் பலமற்ற தொங்கு நாடாளுமன்றம் | யார் ஆளப்போவது?
பிரான்ஸ் பொதுத்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில் , வெளிவந்த முடிவுகள் கணிப்புகளை பிரட்டிப்போட்டிருக்கிறது.
முதலாம் கட்ட வாக்கெடுப்பின் நிறைவோடு வலதுசாரிகள் ஆட்சியை கைப்பற்ற முடியும் என் மார்தட்ட, இரண்டாம் கட்டத்தில் இடதுசாரிகள் இவர்கள் எல்லோரையும் முந்தியடித்து வெற்றியைப்பதிவு செய்துள்ளன.
இருப்பினும் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிட்டாத நிலையில் இனி வரப்போகும் நாடாளுமன்றம் , தொங்கு நாடாளுமன்றமாக அமையப்போகின்றது என்பது இப்போது வெட்டவெளிச்சமான உண்மை.
ஏற்கனவே இடதுசாரிகள் பல்வேறு கட்சிகளின் கூட்டணியாக , எவர் தலைவர் என சிந்திக்கும் நிலையில் இவர்கள் எல்லோருக்கும் பொருத்தமான ஒரு கூட்டணித்தலைவரை அறிவிக்க வேண்டிய பொறுப்பு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் கைகளுக்கு எட்டியிருக்கிறது.
வெளிவந்த முடிவுகளின் படி இடதுசாரிகள் 182 ஆசனங்களையும் , மக்ரோனின் மையவாதக்கட்சி 168 ஆசனங்களையும் லு பென்னின் தேசிய கட்சி 143 ஆசனங்களையும் ஆக்கூடுதலாக கைப்பற்றியுள்ளன.
ஒலிம்பிக் போட்டிகள் இந்த மாதம் பாரீஸில் துவங்கவுள்ள நிலையில் உலகமே பாரீஸ் பக்கம் பார்வையைத்திருப்ப , இந்த பொதுத்தேர்தல் முடிவுகளும் தொங்குநாடாளுமன்னறமாகி உறுதியற்ற தன்மையோடு உலகச்செய்திகளில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
நடப்பு பிரதம மந்திரி கப்பிரியல் அற்றல் தனது ராஜினாமா கடிதத்தை கையளித்ததும், யார் இனி பிரதமர் என்ற செய்தியை அறிவிக்கும் பொறுப்பு மக்ரோனுக்கு உரியதாகும்.
இருப்பினும் கப்பிரியல் அற்றல் தொடர்ந்து தற்காலிகமாக பிரதமர் பதவியைத் தொடர வேண்டும் என மக்ரோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரான்ஸ் அரசியலில் மிகமுக்கிய இந்தகட்டத்தில் தேர்தலை அறிவித்த பிரெஞ்ச் அதிபர் இமானுவேல் மக்ரோன், இந்த தேர்தல் முடிவுகளையும் தனது கட்சி எதிர்காலத்துக்கு சாதகமாக, முடிவுகளை எடுக்க முனைவார் என்பது அரசியல் அவதானிகள் குறிப்பிடும் கருத்தாகும்.
168 ஆசனங்களை வென்ற மக்ரோனின் மையவாதத்தரப்பு, ஏனைய தரப்பின் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்படுகிறது.
விரைவில் எல்லாவற்றிற்குமான முடிவுகள் எட்டப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்போடு பிரெஞ்ச் அரசியல் நகர்ந்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது