மக்ரோனிடம் ஆங்கிலக் கால்வாய் வழியே வரும் அகதிகள் விடயத்தில் கூட்டுறவை வலியுறித்தினார் சுனாக்.

பிரிட்டிஷ் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக ரிஷி சுனாக் பிரெஞ்ச் ஜனாதிபதி மக்ரோனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். தமது நாடுகள் இரண்டுக்கும் இடையே நூற்றாண்டுகளாக நிலவிவரும் நட்பைத் தொடரவேண்டும் என்றும் அதன் மூலம் இரண்டு நாடுகளும் எதிர்கொண்டிருக்கும் எரிசக்திப் பிரச்சினைகளில் பரஸ்பரம் கூட்டுறவு இருக்கவேண்டும் என்று அவர் கூறினார். உக்ரேனின் பாதுகாப்புக்கான உதவிகளை இரண்டு நாடுகளும் தொடரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு தலைவர்களுக்கும் இடையே நடந்த உரையாடலில் முக்கியமாகப் பேசப்பட்ட விடயம் ஆங்கிலக் கால்வாயின் வழியாகப் பிரான்சிலிருந்து ஐக்கிய ராசியத்துக்குள் அனுமதியின்றி நுழையும் அகதிகள், குடியேறிகள் பற்றியதாகும். மிகவும் பரபரப்பான நீர்ப்பாதையான அதன் மூலம் களவாகப் பயணிக்கிறவர்கள் தமக்குக் அகப்படும் படகுகளைப் பாவிக்கிறார்கள். இவ்வருடத்திலேயே பலர் அந்தக் கால்வாயில் இறந்திருக்கிறார்கள். கடந்த வருடம் முழுவதும் 651 பேர் அக்கால்வாய் மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்தார்கள். இவ்வருடம் சுமார் 38,000 பேர்  அதன் மூலமாக பிரிட்டனை அடைந்திருக்கிறார்கள்.

பலரின் மரணத்துக்குக் காரணமான அப்பாதையில் அனுமதியின்றிப் பயணம் செய்பவர்களை முழுவதுமாக நிறுத்தப் பிரான்ஸ் உதவவேண்டும் என்று பிரதமர் சுனாக் வேண்டிக்கொண்டார். ஏற்கனவே பிரிட்டிஷ் அரசு ஆங்கிலக் கால்வாய் பாதுகாப்புக்காக பிரான்சுக்கு ஒரு தொகையைக் கொடுத்து வருகிறது. சுனாக் அந்தக் கூட்டுறவை மேலும் அதிகரிக்க விரும்புகிறார்.

பிரெஞ்ச் எல்லைக்காவலர்களும், உளவாளிகளும் சேர்ந்து பிரான்ஸின் கடற்கரை எல்லைகளைக் கண்காணிக்க வேண்டும் என்று சுனாக் விரும்புகிறார். அதற்கான திட்டத்தில் ஒரு தெளிவான எண்ணிக்கையைக் குறியாகக் கொண்டு அகதிகளின் வருகையைக் கட்டுபடுத்த வேண்டும் என்பது சுனாக்கின் எண்ணம். அதேசமயம் பிரிட்டனுக்கு வரும் அகதிகளின் விண்ணப்பங்களில் 80 % ஐ ஆறு மாதங்களுக்குள் கையாளவேண்டும் என்கிறார் அவர். தற்போது அதற்கான காலம் 480 நாட்களாக இருந்து வருகிறது. எல்லைக் காவலைப் பிரென்சுக்காரர்களுடன் சேர்ந்து தீவிரமாக்குதல், அகதிகளின் விண்ணப்பங்களை அதி வேகமாகப் பரிசீலித்தல் இரண்டும் சேர்ந்து அகதிகள் வருகையை மட்டுப்படுத்தும் என்பது அவரது கணிப்பாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *