ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய ஆண் குழந்தையின் உடல் எச்சம் நோர்வே நாட்டுக் கரையில் மீட்பு!

படகு அகதிகளின் சோகக் கதைகள் தொடர்கின்றன. கடந்த ஆண்டு ஒக்ரோபரில் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்த குர்திஷ் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலம் நோர்வேயின் கரையோரம்மீட்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் தென்மேற்கே Karmoy என்றஇடத்தில் கடற்கரையோரம் மீட்கப்பட்ட உடல் எச்சம் குர்திஷ் குழந்தையினுடையது என்பது மரபணுப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக நோர்வே அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த ஜனவரியில் கரையோர அலுவலர்கள் இருவரால் கண்டு மீட்கப்பட்ட சடலம் நோர்வே குழந்தைகள் எவருடையதும் அல்ல என்பதை உறுதிப்படுத்திய அந்நாட்டின் அதிகாரிகள், அயல் நாடுகளுடன் தொடர்பு கொண்டு விசாரணைகளை நடத்திவந்தனர். சடலத்தில் காணப்பட்ட உயிர்காப்பு அங்கி நோர்வே நாட்டுக் குரியது அல்ல என்பதால் குழந்தையின் சடலம் வேறு நாடொன்றில் இருந்து கடலில் அடித்துவரப்பட்டிருக்கலாம் என்பது உறுதியானது. ஒஸ்லோ பல்கலைக் கழகத்தின் தடய அறிவியல் துறை நிபுணர்களது முயற்சியால் தற்போது குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளது.

அட்றின் (Artin) என்ற அந்த மகவின் எச்சங்கள் அடக்கம் செய்வதற்காக ஈரானில் உள்ள உறவினர்களிடம் அனுப்பிவைக்கப் படவுள்ளன.கடந்த ஆண்டு ஒக்ரோபர் 27 ஆம் திகதி பிரான்ஸில் இருந்து படகு மூலம் இங்கிலாந்துச் செல்வதற்கு முயன்ற ஈரானிய குர்திஷ் குடும்பம் ஒன்றே கடலில் மூழ்க நேர்ந்தது.காணாமற்போன குழந்தையின் தந்தையாகிய 35 வயதான ரசூல் ஈரான்-நெஜாத் (Rasoul Iran-Nejad), தாயாகிய 35 வயது ஷிவா முகமது பனாஹி(Shiva Mohammad Panahi) மற்றும் இரு பிள்ளைகளாகிய அனிற்றா (Anita) , அர்மின் (Armin) ஆகியோரது உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டிருந்தன.15 மாதங்களேயான அட்றினின் (Artin) உடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமற் போயிருந்தது. இவர்களுடன் அதே படகில் பயணித்த வேறு 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருந்தனர்.

ஆங்கிலக் கால்வாய் வழியே படகில் ஆட்களை இங்கிலாந்துக்குக் கடத்துகின்ற முகவர் ஒருவருக்கு அவர்கள்ஐயாயிரம் ஈரோக்கள் தொகையைவழங்கியிருந்தமை தெரியவந்தது. படகு மூழ்கியமை தொடர்பான விசாரணைகள் பிரான்ஸில் நடைபெற்று வந்தன.இந்த நிலையிலேயே குழந்தை யின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் ஆயிரக்கணக்கான ஈரானிய குர்திஷ் மக்கள் சட்டவிரோத பயண முகவர்களுக்குப் பணம் செலுத்தி ஐரோப்பா நோக்கிப் புலம் பெயர்ந்து வருகின்றனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் பயண வழிகளில் படகு விபத்துகளில் உயிரிழக்கின்ற சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *