நேற்று 11 ஆயிரம் புதிய தொற்று தடுப்பூசியா? வைரஸ் சுனாமியா?தீர்மானியுங்கள் என்கின்றது அரசு.

கட்டாய சுகாதாரப் பாஸை எதிர்த்து நாடெங்கும் ஒரு லட்சம் பேர் பேரணி!

பிரான்ஸில் அதிபர் மக்ரோன் அறிவித்த கட்டாய சுகாதாரப் பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது. அரசின் செயலை “சுகாதார சர்வாதிகாரம்” என்று சாடிப் பல்லாயிரக் கணக்கான மக்கள் பல நகரங்களிலும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

விருப்பத்துக்கு மாறாக தடுப்பூசியைத் திணிப்பது அரசின் அதிகாரத் துஷ்பிர யோகம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

நேற்று சனிக்கிழமை நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில்ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேர் பங்கு பற்றினர் என மதிப்பிடப்பட்டுள்ளது.தலைநகர் பாரிஸில் மட்டும் சுமார் 18 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, நாடெங்கும் நேற்று பதிவாகிய ஒரு நாள் தொற்று எண்ணிக்கை10 ஆயிரத்து 949 ஆகும். மாறுதலடைந்த புதிய வைரஸ் தொற்றுவது வேகமாக அதிகரித்து வருகின்ற போதிலும் முன்னரைப்போன்று ஆஸ்பத்திரி அனுமதிகளில் பெரிய அளவிலான அதிகரிப்புகள்இன்னமும் ஏற்படவில்லை.

அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் ஞாயிறு வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியில், தடுப்பூசியா அல்லது வைரஸ் சுனாமியா என்பதைத் தீர்மானிக்கின்ற முக்கிய கட்டம் இது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

“தெளிவாக ஒர் எச்சரிக்கையை முன் வைக்க விரும்புகிறேன். தடுப்பூசியா, அல்லது வைரஸ் சுனாமியா? நமக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன”-என்று அவர் அந்த செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.

சுகாதாரப் பாஸ் நடைமுறைகளையும்மருத்துவப் பணியாளர்களுக்குத் தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் முடிவையும்சரியானவை என்று நியாயப்படுத்திய அவர், தடுப்பூசி ஏற்றிக்கொண்டு தங்களையும், சுற்றத்தாரையும் பாதுகாத்தவாறு நாளாந்தப் பணிகளைத் தொடர் கின்ற பெரும்பாலான மக்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அதேசமயம் இன்னமும் ஊசியை எதிர்த்து வருகின்ற சிறு பான்மையி னரை “சபல புத்தியுடன் தோல்வியின் விளிம்பில் நிற்போர்”என்று குறிப்பிட்டார். சுகாதார விதிகளைக் கட்டாயமாக்கி அதிபர் மக்ரோன் எடுத்த தீர்மானத்தை துணிச்சலான முடிவு என்று மக்கள் பிரதிநிதிகள் 300 பேர் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வலது மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த நகர மேயர்கள் உட்பட 300 மக்கள் பிரதிநிதிகளே கடிதம் ஒன்றில் மக்ரோனுக்குத் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *