மணல் தேசத்து மீன்கள்!| கவிநடை
எம் தாயகத்து மண்ணின் மடியில் பிறந்து
எட்டா அயலகத்தில் அகதியாக விழுந்து
எம் பூர்வீகத்து முகவரியினைத் தொலைத்து
எச்சமில்லா எங்கள் வாழ்வின் பயணம்
எழுதி முடியாத இன்னல்களில் தவிக்கும்!
எங்கும் ஒரு நிலை இல்லாத வாழ்வும்
ஏனிந்த வாழ்வென புரியாது உழைப்பும்
என்றாவது மாறிவிடும் நம் நிலையும்
எண்ணியது நடக்கும் என நாளும்
ஏக்கங்கள் நிரம்பிய உயிர்ச் சுமையும்
ஏகாந்தம் நிலவும் பாரத்துடன் மனதும்
எஞ்சிய குருதியில் எழும் மொழியுணர்விலும்
எண்ணத்தில் நிறைந்திட்ட தாய்நாட்டின் பற்றிலும்
எதிர்வரும் நாட்களை உந்தித் தள்ளும் மூச்சுடன்
எரிவனத்தின் மணல் தேசத்து மீன்கள் நாங்கள்!
எழுதியது : மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.