உறங்கும் எரிமலை..!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *நெருப்பு*

படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

ஏய் ! நெருப்பே !
உனக்கு
எதற்கு இத்தனை வாய் ?

உன் பசி தீரவே கூடாது என்று
எந்த முனிவர் சாபமிட்டார் ?
அப்படி என்ன
பெரும் தவறு நீ செய்தாய் ?

உனக்கு பிடித்தது
பிடிக்காதது என்பது
எதுவும் இல்லையா ?
எல்லாவற்றையும்
உண்கிறாயே …!

சிக்கிமுக்கி கற்கள்
உன் பெற்றோராக இருக்கலாம்
அதற்காக
உன் மனதையும்
கல்லாக்கி கொள்ளனுமா…?

காற்றில்
வாழவும் செய்கிறாய்
சாகவும் செய்கிறாய்
அது என்ன
உன் காதலியா ?

கற்பூரத்தில்
தெய்வமாகும் நீ !
கூரையில்
சாத்தானாகி விடுகிறாய்
பற்றுகின்ற இடம் முக்கியமா ?

அகல்விளக்கு அரங்கில்
திரிமேடையில்
உனது நடனம்
நடராஜனையும்
வென்று விடுகிறது….

எல்லாவற்றையும்
பச்சையாக சாப்பிட்ட
எங்களுக்கு
சமைத்துச் சாப்பிட
கற்றுக் கொடுத்தது
நீதான் நன்றி நன்றி நன்றி !

கல்லுக்குள்
கல்லைத்தான்
பார்க்க முடிகிறது
அதில் நீ எங்கு இருக்கிறாய் ?

சுடராக இருக்கும் போது
உன்னை
காற்று திருடிச் சென்று
எங்கு சேமித்து வைக்கிறது?

தண்ணீர் என்ன
உன் மனைவியா ?
கண்டவுடன்
அடங்கி விடுகிறாய்…
இல்லை
ஒழிந்து கொள்கிறாய்…

இன்னும்
உனக்கு
நல்லது கெட்டது
தெரியவில்லை
பிணத்தையும் எரிக்கிறாய்
பணத்தையும் எரிக்கிறாய்….

நீ ஆணா ?
பெண்ணா ?
ஆண் தொட்டாலும் சுடுகிறாய்..
பெண் தொட்டாலும் சுடுகிறாய்…

விட்டில்பூச்சியை விட
உன் மேல்
அன்பு வைத்தவர்கள்
இந்த உலகில்
யாரும் இருக்கும் முடியாது…..


.
அணைந்த எரிமலையில்
உனது
பயனைப் பார்த்தேன்…
உறங்கும் எரிமலையில்
உனது
பெருமையைக் கண்டேன்….
வெடிக்கும் எரிமலையில்
உனது
ஆற்றலைக் கண்டேன்…

தீப்பெட்டிகள் தான்
உன்னுடைய குஞ்சுகளோ?

ஆக்கவும்
அழிக்கவும்
தெரிந்த உன்னோடு
நாங்கள் பழகினாலும்
நாங்கள் அழிக்க மட்டுமே
தெரிந்து கொண்டோம்…! *கவிதை ரசிகன்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *