கொடூரமாக தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற அதிபர் விசுவாசம் அவர்கள் மரணம்
கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரயின் தற்போதைய அதிபரும், ஓய்வு பெற்ற முன்னாள் அதிபரொருவரும் கடந்த சனிக்கிழமை (15.02.2025) பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரவு வேளை பயணித்துக்கொண்டிருந்த போது தனங்கிளப்புக்கு அண்மித்த பகுதியில் நிறைபோதையில் வந்த காடையர் குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில், ஓய்வு பெற்ற அதிபர் விசுவாசம் அவர்கள் உயிரிழந்துள்ளார்.

குறித்த செய்தி கல்விப்புலத்துக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் வாகனங்கள் சில ஏற்கனவே காடையர்களால் இந்த பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தற்போது அறிய முடிகின்றது.
அவ்வாறாயின் இத்தகைய குற்றச் செயல்கள் நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸார் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறையற்று செயற்பட்டு வந்துள்ளமை நன்கு புலனாகின்றது. இந்நிலைமை இன்று ஒரு கல்வியலாளரின் உயிர் பறிக்கப்படுமளவிற்கு சென்றுள்ளது.
இது இலங்கையில், குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் சாதாரண மக்கள் கூட பாதுகாப்பாக பயணிக்கமுடியாது என்ற நிலையையே வெளிப்படுத்தி நிற்கிறது
.
தமது கடைமைகளின் நிமித்தம் கூட சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சென்று வர முடியாத அளவுக்கு காடையர் கும்பலின் ஆதிக்கம் தலைதூக்கியிருக்கும் நிலையில், இத்தகைய சம்பவங்களை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
வடமாகாணத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்றதா? அல்லது காட்டாட்சி நடைபெறுகின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது.
சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கி ஆசிரியர்கள் பயணித்த வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதன் போது அவ்வாகனத்தில் பயணித்திருந்த ஆசிரியர்கள் தெய்வாதீனமாக தப்பித்திருந்தனர்.
குறித்த ஆசிரியர்களின் வாகனப் போக்குவரத்து தொடர்பாக, ஆக்கபூர்மான செயற்பாடுகள் எதனையும் செய்யாமல், வரட்டு வியாக்கியானங்கள் கூறிவரும் வடமாகாண ஆளுநர் செயலகம், ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீது சட்டவிரோதமாக தாக்குல் நடத்தியோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதன் பின்னணியில் வடமாகாண ஆளுநரின் பக்கச்சார்பான செயற்பாடுகள் உள்ளதா?
என்ற பாரிய சந்தேகங்கள் எழுகின்றன.
இப்படியான நிலையில், பூநகரி பிரதேச பாடசாலையின் அதிபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை வெறித் தாக்குதலுக்கும், படுகொலைக்கும் நீதியைப் பெற்றுக்கொடுப்பார்களா? என்பது சந்தேகமே.
தெற்கிலே நடைபெறும் சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த உடனடியாக செயற்படும் அரசாங்கம், தமிழர் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத மற்றும் குற்றச்செயல்களுக்கு துணைபோய், பாரபட்சங்களை வெளிப்படுத்திவருவது புதிய விடயமல்ல.
தமது கடமைகளை சரியாக ஆற்ற முடியாத அதிகாரிகள் பதவியை விட்டு விலகுமாறு அறிவுரை கூறிவரும் வடமாகாண ஆளுநர், வடமாகாணத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கும், ஆகக்குறைந்தது, கல்விச்சமூகம் தனது கடமைகளை உரிய நேரத்தில் ஆற்றுவதற்காக பாதுகாப்பாக பிரயாணத்தை மேற்கொள்வதற்காகவேனும் தனது பதவியை ஆரோக்கியமாக பயன்படுத்துகின்றாரா?
என்பதை சுயபரிசோதனை செய்யவேண்டும்.
கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், கல்விச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு எதிராக விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் தொழிற்சங்க செயற்பாடுகளை மேற்கொள்வோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆ.தீபன் திலீசன்,
உப தலைவர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்.