யாழ் இந்துக்கல்லூரிக்கு மாணவர் அனுமதி|எவ்வாறு வழங்கப்படும்|அதிபர் தரும் தகவல்

தரம் 5 புலமைப்பரிசில் பாடசாலைக்கான வெட்டுப்புள்ளிகளும் தரம் 6ற்கான மாணவர் அனுமதி பெறுவது தொடர்பாக கல்லூரி அதிபர் வெளியிட்டுள்ள தகவலை இங்கே பகிரப்பட்டுள்ளது. குறித்த தகவல் ஏனைய கல்லூரிகளுக்கும் பொருந்தலாம் என்ற வகையில் இங்கே எழுதப்படுகிறது.

யாழ் இந்து அதிபர் வெளியிட்டுள்ள தகவல் இதோ 👇

அண்மையில் வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் பின்னர் பலரது கேள்வி எவ்வாறு தங்களுடைய பிள்ளைகளை யாழ் இந்துக் கல்லூரியில் அனுமதிப்பது?

இது தொடர்பாக பெற்றோர்கள் போதிய விளக்கம் பெற்றிருப்பது அவசியம். அது முறைகேடுகளுக்கு துணைபோகாது இருக்க உதவும்.

பொதுவாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகிய பின்னர் கல்வி அமைச்சினால் கோரப்படும் தினத்திற்குள் தங்களுடைய பிள்ளைகள் படித்த ஆரம்ப பாடசாலையூடாக மத்திய கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாட்டுக் கிளைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக A,B,C என்ற 3 படிவங்கள் பயன்படுத்தப்படுகின்றது. A,C, என்ற படிவங்கள் பாடசாலை தெரிவிற்காக பூரணப்படுத்தப்படல் வேண்டும். B படிவம் உதவு தொகையினை பெறுவதற்காக பூரணப்படுத்தப்படல் வேண்டும். இவற்றினை பூரணப்படுத்தி பெற்றோரின் கையொப்பத்துடன் வலயக் கல்வி காரியாலயத்தினூடாக மத்திய கல்வி அமைச்சுக்கு ஆரம்ப பாடசாலை அதிபரினால் அனுப்பி வைக்கப்படும்.
கடந்த இரண்டு வருடங்களாக இது நிகழ்நிலையாக (online) மூலம் முன்னெடுக்கப்படுகின்றது.

உதாரணத்திற்கு யாழ் இந்துக் கல்லூரியினை இங்கு குறிப்பிடுகின்றேன்
யாழ் இந்துக் கல்லூரிக்கு அம் மாவட்ட வெட்டுப் புள்ளிக்கு மேலதிகமாக பெற்ற மாணவர்களே விண்ணப்பிக்கலாம். பொதுவாக பெற்றோர் விண்ணப்பிக்கும் போது 1 இலிருந்து 10 பாடசாலைகளை விருப்பின் அடிப்படையில் பெயர் குறித்து விண்ணப்பிக்கலாம். இலங்கையின் எப்பாகத்திலும் உள்ள பாடசாலைகளுக்கும் விண்ணப்பிக்கலாம். முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் கண்டியில் உள்ள மாணவனும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம். விடுதிவசதியுள்ள பாடசாலையாக யாழ் இந்துக் கல்லூரி இருப்பதால் இலங்கையின் அனைத்து பகுதியிலிருந்தும் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். பொருளாதார ரீதியில் பின் தங்கிய தூர பிரதேச மாணவர்களுக்கு இலவசமான விடுதி வசதி வழங்கப்படும்.
பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களுக்கு மாதாந்தம் பாடசாலையினால் உதவி தொகையும் வழங்கப்படும்.
யாழ் இந்துக் கல்லூரி வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்படுவது முதலாவது விருப்பாக யாழ் இந்துக் கல்லூரியினை குறிப்பிட்டு இலங்கையில் இருந்து கிடைத்த அனைத்து மாணவர்களினதும் விண்ணப்பத்தில் இருந்து 360 மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர். 360 வது மாணவனின் புள்ளியே யாழ் இந்துக் கல்லூரிக்குரிய வெட்டுப் புள்ளியாக தீர்மானிக்கப்படும். யாழ் இந்துக் கல்லூரியில் மொத்தமாக 8 வகுப்பறைகள் தரம் 6 இல் உள்ளன. கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு அமைய ஒரு வகுப்பில் 45 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.( சுற்று நிரூப இலக்கம்- 2008/37) எனவே 8 வகுப்பறைககள் காணப்படும் யாழ் இந்துவிற்கு 360 மாணவர்கள் உள்வாங்கப்படுவர்.(8 X 45=360).

தெரிவு செய்யப்பட்ட 360 மாணவர்களின் பெயர் விபரங்களையும் மத்திய கல்வி அமைச்சு பாடசாலைக்கு அனுப்பி வைக்கும். மாணவனை பதிவு செயவதற்கான காலப்பகுதியினை குறிப்பிட்டு பாடசாலையினால் ஓவ்வொரு மாணவனுக்கும் தனித் தனியாக அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும்.

பதிவு செய்யும் தினத்தில் கல்வி அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட வசதிகள் சேவைகள் கட்டணம், அங்கத்துவ கட்டணம் மற்றும் கல்வி அபிவிருத்தி நிதி மட்டுமே செலுத்தப்படுதல் வேண்டும். அதற்கான பற்றுச்சீட்டு பாடசாலையினால் வழங்கப்படும். யாழ் இந்துக் கல்லூரியின் 2022ம் வருட வசதிகள் சேவைகள் கட்டணம் ஆண்டிற்கு ரூபா 300, அங்கத்துவ கட்டணம் ஆண்டிற்கு ரூபா 600,பாதீட்டு பற்றாக்குறைக்காக மாணவரிடம் அறவிடப்படும் கல்வி அபிவிருத்தி நிதி ஆண்டிற்கு ரூபா 3000 (இது வருடாந்த நிதி திட்டமிடலிற்கு அமைய ஓவ்வொரு ஆண்டும் மாறுபடும்).
தனது சகோதரன் யாழ் இந்துவில் கல்வி கற்பின் வசதிகள் சேவைகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. அதே போன்று பொருளாதார ரீதியில் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவனாயின் கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தல் கடிதம் சமர்ப்பிப்பின் பாடசாலை அபிவிருத்தி சங்க நிதி செலுத்த தேவையில்லை.

மேன்முறையீடு செய்தல்.

தமது பிள்ளைகளால் குறிப்பிடப்பட்ட முதலாவது தெரிவான பாடசாலை கிடைக்காத பெற்றோர்கள் பாடசாலைக்குரிய வெட்டுப் புள்ளி வெளியாகிய பின்னர் கல்வி அமைச்சின் இணையத்தளத்தினூடாக நிகழ்நிலையாக (online) மேன்முறையீடு செய்யலாம்.
விண்ணப்பித்து அனுமதி கிடைக்காத மாணவர்களும் மற்றும் மாவட்ட வெட்டுப்புள்ளியை விட கூடுதலாக பெற்று முன்னர் விண்ணப்பிக்காத மாணவர்களும் மேன்முறையீட்டினூடாக விண்ணப்பிக்கலாம்.
பொதுவாக விண்ணப்பித்து யாழ் இந்துக் கல்லூரி அனுமதிகிடைத்து குறிப்பிட்ட காலத்தினுள் பதிவு செய்யாத மாணவர்களின் வெற்றிடத்திற்கு மேன்முறையீடு செய்த மாணவர்களின் புள்ளி ஒழுங்கில் மத்திய கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படும் பட்டியலுக்கு அமைய மாணவர்கள் இணைத்து கொள்ளப்படுவர்.

முதல் தடவை ஆரம்ப பாடசாலையூடாக விண்ணப்பித்த விண்ணப்பத்திற்கு அமைய அடுத்த புள்ளி ஒழுங்கில் மாணவர் இணைத்து கொள்ளப்படுவதில்லை. மேன்முறையீட்டின் அடிப்படையில் மட்டும் உள்வாங்கப்படுவர் எனும் தகவலை பெற்றோர்கள் அறிந்திருத்தல் வேண்டும்.

பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள் யாழ் இந்துக் கல்லூரியில் இணையும் போது அவர்களுக்கு மாதாந்தம் ரூபா 5000 உதவுத் தொகை பாடசாலையினால் வழங்கப்படுகின்றது. அத்தோடு விடுதி கட்டணம் இன்றி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கும் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றது. விடுதிக் கட்டணம் தற்போது மாதாந்தம் ரூபா 12,000 அறவிடப்படுகின்றது. விடுதி மாணவர் தொகை அதிகரிக்கும் போது இக்கட்டணம் குறைவடையும்.
பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு யாழ் இந்து அன்னை எப்போதும் துணைநிற்பாள்.

இது பெற்றோர்கள் எந்த வித முறைகேடுமின்றி பாடசாலையில் தமது பிள்ளைகளை உட்சேர்ப்பதற்கும் அதன் படிமுறைகள் தொடர்பாக அறிந்து கொள்வதற்காகவும் எழுதப்பட்ட ஆக்கம்.

அதிபர்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *