இந்தியாவுக்குள் இலங்கை – இலங்கைக்குள் இந்தியா – பகுதி 1

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். சில வேளைகளில் ஊரை இரண்டாக்குவதை தனது சுயலாபத்துக்காக கூத்தாடியே செய்வதுண்டு. 75 வருடங்களாக தமது உரிமைக்காகப் போராடி வருவதாகச் சொல்லும் இன்றைய தமிழ்த் தலைமைகள் கடந்த ஐந்து தசாப்தங்களாகவே அத்தகைய கூத்தாடி யாரென்று தெரிந்தும் தெரியாதது போல கூத்தாடியுடனேயே கூடிக் குலாவி வருகிறார்கள். அண்மைக் காலமாக வேறு சிலரும் அதனையே செய்து வருகிறார்கள்.

எழுபதுகளிலிருந்தே இலங்கை விவகாரங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் ரீதியாகத் தலையிட்டு இந்தியா இலங்கையை தனது கைக்குள் வைத்துக் கொள்ளப் பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. இதில் இந்தியாவின் வர்த்தக மற்றும் எல்லைப் பாதுகாப்பு நலன்கள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆரம்பத்தில் அரசியல் கொள்கை, வர்த்தக உடன்படிக்கைகள் என்பனவும் பின்னர் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுத்த பின்னர் அந்த விவகாரமும் இந்தியாவின் ஆயுதங்களாக அமைந்தன. போர் முடிந்த சூழலில் இந்தியா கடந்த ஒரு தசாப்த காலத்தில் ஆன்மீகத்தை முதன்மை ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளது. மதம் மிகப் பலமான ஆயுதம் என்பதை இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே தான் ஆட்சி செய்த மாநிலத்தில் பரீட்சித்து வெற்றி கொண்ட ஒருவரின் தலைமையில் இயங்கும் ஒரு நாட்டிடம் இருந்து இது எதிர்பார்க்கக்கூடியதே! இலங்கையிலும் கடந்த 75 வருடங்களாக  மதம்தானே மிகவும் பலமாக ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது!

இலங்கையில் இறுதிப் போர் முடிந்த பின்னர் 2016 இல் இலங்கையில் சிவசேனா அமைப்பினை மறவன்புலவு சச்சிதானந்தம் நிறுவினார். அதன் பின்னர், இலங்கையிலும் “இந்து”, “இந்துத்துவா” போன்ற வார்த்தைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இலங்கை சைவ பூமி அதைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லியபடி தன் எஜமானின் ஆசைப்படி இலங்கையிலும் இந்துத்துவ கொள்கையைப் பரப்புவதில் தனது முயற்சியைத் தொடர்ந்து வந்தார். அக்காலப் பகுதியில் இந்தியாவில் சிவசேனா ராஜ்ய சபா எம்.பி. சஞ்சய் ரவுட் தமது கட்சியின் கொள்கை வேலைகளை இலங்கை சிவசேனா ஆதரவுடன் செயற்படுத்துவோம் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சிவசேனை அமைப்பைத் தொடங்கிய சச்சிதானந்தம், அதனைஒரு கட்சியாக்காது கொள்கைசார் அமைப்பாக மட்டுமே நிலைநிறுத்த முயன்றார். நேரடித் தேர்தலில் இறங்கி மூக்குடைபட்டால் மறுபடியும் மத அரசியல் பேசினாலும் மக்களிடம் எடுபடாமல் போகலாம் என்ற முன்னெச்சரிக்கையும் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். அதேநேரம் பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல் வரும்போதெல்லாம் கிறிஸ்தவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களிடமும் சைவ வேட்பாளரை நிறுத்துங்கள் என்று கட்சிகளிடமும் கோரிக்கை வைப்பதையும் வாடிக்கையாக்கிக் கொண்டார்.

இவ்வாறுதேர்தல் காலத்திலும் ஏனைய பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தனது இந்து மதப் பிரச்சாரம், கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான பிரசார வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இவ்வாறு இருக்கும்போது, 2021 பெப்ரவரி மாத முற்பகுதியில் இந்தியாவின் கிழக்கில் உள்ள ஒரு சிறிய மாநிலமான திருபுராவின் முதலமைச்சர் பிப்லாப் டெப் (Biplap Deb) ஒரு விடயத்தை வெளிப்படுத்தியிருந்தார். நேபாளத்திலும் இலங்கையிலும் பிஜேபி அரசை அமைக்க அமித் ஷா திட்டம் வைத்துள்ளார் என்பதுதான் அந்தச் செய்தி.

அந்தச் செய்தி வெளிவந்த அதே வேகத்தில் இலங்கையின் சிவசேனாத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் இலங்கையில் பாஜக கிளையை தொடங்க இங்குள்ள இந்துத்துவவாதிகள் விரும்புகின்றனர் என்று ஒரு அறிக்கை விட்டிருந்தார். அப்போது தெற்கில் சில பிக்குகளும் ஒருசில சிங்கள அரசியல்வாதிகளும் அதனை சந்தேகித்து அறிக்கை விட்டனர். சிலநாட்களில் வழமைபோல இந்த விடயம் அடங்கிப் போனது.

அதன் பின்னர் அடுத்த மாதமே (மார்ச் 2021) இலங்கை பாரதிய ஜனதா கட்சி தொடங்கப் போவதாக ஒரு அறிவிப்பு வந்தது. அறிவிப்பைத் தொடர்ந்து ஒரு  ஊடக சந்திப்பும் யாழில் நடைபெற்றது. மறவன் புலவுதான் கட்சி தொடங்குகிறார் என்று மக்கள் நினைத்திருக்க முத்துசாமி என்ற ஒருவர் தானே அந்தக் கட்சியின் தலைவர் என்று அறிவித்தார். இதற்கும் மறவன் புலவுக்கு தொடர்பிருந்ததா என்பது வெளிப்படவில்லை. அதேநேரம் இந்தக் கட்சி தொடங்கிய சம்பவம் தொடர்பாக தெற்கில் சிறு சலசலப்பு ஏற்பட்டாலும் அது விரைவில் அடங்கிவிட்டது.

திருபுராவின் முதலமைச்சரின் அறிவிப்பு, இலங்கை பா.ஜ. கட்சி தொடங்கும் படலம் என்பன இலங்கையில் பிஜேபியின் அடுத்த கட்ட செயற்பாட்டுக்கு முன்னர் ஆழம் பார்க்கும் வேலையோ என்று நினைக்கத் தோன்றியது. ஏனெனில், ஆரவாரமாகக் அந்தக் கட்சி தொடங்கினாலும் அதன்பின்னர் அந்தக் கட்சி இருக்கிறதா, இயங்குகிறதா என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

இவை இப்படியிருக்க, கடந்த வருடம் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருந்த சூழலில், இ.தொ.க. ஏற்பாடு செய்த மேதின நிகழ்வில் கலந்து கொள்ள அண்ணாமலை வந்திருந்தார். ஏற்கனவே மலையகத்தில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளையும் அவர் திறந்து வைத்தார். அப்போது சீதை சிறை வைக்கப்பட்டிருந்த காட்டுக்குப் போனதாகவும் அனுமாரின் காலடித் தடத்தையும் பார்த்து வழிபட்டதாகவும் கூறியிருந்தார். அதன் பின்னர், தெற்கிலிருந்து வடக்கு வரை பயணம் செய்ததுடன் ஆங்காங்கு இந்திய அரசின் மீதும் மோடி மீதும் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாகவே அவரது உரைகள் அமைந்திருந்தன.அதன்போது அவர் தமிழகத்தில் பதவியில் இருக்கும் தி.மு.க அரசை குறை கூறவும் தவறவில்லை. தமிழக ஊடகங்களையும் அவர் விட்டு வைக்கவில்லை. முள்ளிவாய்க்கால் முற்றத்திலும் உரையாற்றத் தவறவில்லை. கச்சதீவு விவகாரம், தமிழக, இலங்கை மீனவர் முரண்பாடு தொடர்பாகவும் புரிதலோடு பேசினார் என்று சில ஊடகங்கள் பேசும் அளவுக்குத் தெளிவாகப் பேசிச் சென்றார். அதுமட்டுமன்றி அதன் பின்னர் அவர் கொடுத்த ஒரு பேட்டியிலும் இலங்கைக்கு உதவும் குடிசார் கடமை (Civic Duty) மோடி அரசுக்கு இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இன்னும் தொடரும் ……

எழுதுவது : வீமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *