இணையமும் செய்தி ஊடகங்களும்

அன்றும் இன்றும் ஊடகங்கள் எமது நாளாந்த வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவையாக இருக்கின்றன. நாட்டு நடப்புகளை மக்களுக்கு அறியத் தருவதிலும் பொதுமக்களின் அபிப்பிராயங்களை கட்டமைப்பதிலும் சமூகப் பிரச்சனைகளை வெளிக் கொணர்வதிலும்  சமூகத்தை வலுவூட்டுவதிலும்  ஊடகங்கள் கடந்த காலங்களில் வகித்த பங்கு மிக முக்கியமானது. உலகில் நடைபெற்ற முக்கியமான சமூகப் புரட்சிகள், அரசியல் மாற்றங்களில் ஊடகங்கள், குறிப்பாக பத்திரிகைகள் பெரும் பங்காற்றின.

ஒரு நாட்டில் இயங்கும் ஊடகங்கள் மக்களுக்கு சரியான தகவல்களை அறியத் தருதல், மக்களை விழிப்பூட்டுதல், பொழுதுபோக்கு அம்சங்களூடாக மக்களை மகிழ்வித்தல், கலாச்சார விடயங்களைக் கலந்துரையாடல், கலாச்சார விழுமியங்களை அடுத்த சந்ததிக்குக் கடத்துதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், இவை அனைத்தையும் ஊடக தர்மத்துக்கு உட்பட்டே முன்னைய காலங்களில் ஊடகங்கள் செய்து வந்தன. இதற்குக் காரணம், ஒரு சனநாயக கட்டமைப்பின் நான்காவது தூணாக ஊடகம் கருதப்பட்டு வந்ததேயாகும். இன்னொரு விதத்தில் சொன்னால் பல நாடுகளில் ஊடகங்கள் தமது சமூகப் பொறுப்பு என்ன என்பதை நன்கு உணர்ந்திருந்ததோடு அரசுகளின் ஒடுக்குமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் பொருட்படுத்தாது தமது கடமையைச் செய்து வந்தன. இன்றும் பல ஊடகங்கள் அதனைத் தொடர்ந்து செய்து வருகின்றன.

இவ்வாறு ஊடகங்கள் சிறப்பாகச் செயற்பட்டமைக்கு அவர்கள் சமூகப் பொறுப்புடன் தொழிற்பட்டது மட்டுமன்றி, ஊடகங்களில் இயங்கிய மூத்தவர்கள்,  குரு – மாணவர் முறையில்  புதியவர்களை பயிற்றுவித்து வழிகாட்டும் பாரம்பரியமும் முக்கிய காரணமாக இருந்தது. சில தசாப்தங்களுக்கு முன்னர் ஒருவர் ஊடகத்துறையில் நுழைந்து பிரகாசிப்பது அவ்வளவு சுலபமான விடயமாக இருக்கவில்லை. அதற்கு முறையான பயிற்சியும் கடும் உழைப்பும் தேவைப்பட்டது. அவ்வாறு கடின உழைப்புடன் மேலே வந்ததாலேயோ என்னவோ அவர்கள் எல்லோரும் தமக்கென்று  பல விழுமியங்களைத் தொடர்ந்து பேணி வந்தார்கள். அந்த வழிவந்தவர்கள் இன்றும் தமக்கென சுயகட்டுப்பாட்டுடன் இயங்கி வருகிறார்கள்.

தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரையில் இரண்டு அல்லது இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் அப்போது ஆட்சியில் இருந்த ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில்  முதலில் ஆங்கிலப் பத்திரிகைகள் வெளிவந்தன. அதன்பின்னர் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சுதேசிகளால் தமது சுதந்திரப் போராட்ட முன்னெடுப்பில் உறுதுணையாக இருக்க உள்ளூர் மொழிகளில் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டன.

19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் சுதந்திரமடையும் சூழலில்  இவ்வாறு சுயாதீனமாக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைகள் சுதந்திரப் போராட்டத்தில்  சுதேச மக்கள் உருவாக்கிய கட்சிகள் சார்பாக இயங்கத் தொடங்கின. அவை அப்போது அநீதிகளைத் தட்டிக் கேட்கும் ஊடகங்களாக இயங்கினாலும் சுதந்திரத்தின் நாட்டின் ஆளும் கட்சியின் சார்புநிலையை எடுத்தன. சில ஊடகங்கள் நிரந்தரமாக அரசாங்கத்தின் ஊதுகுழலாகவும் மாறின.

அதன் பின்னர் மீண்டும் புதிதாக சுயாதீனமான பத்திரிக்கைகள் தோற்றம் பெற்றன. அவை அரசின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் பணியை முன்னெடுத்தன. இவ்வாறு சுதந்திரமாக தோற்றம் பெற்ற ஊடகங்களும் வளர்ச்சியடைந்து அரச ஊடகங்களுக்கு இணையாக சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தின. ஆனால் ஒரு கட்டத்தில் அரசியல் கட்சிகள் தமக்கு சாதமான செய்திகள் மட்டும் மக்களைச் சென்றடைவதற்காக தாங்களே தனியாக பத்திரிகைகளை வெளியிட ஆரம்பித்தன அல்லது தமக்கு சார்பான பத்திரிகைகளோடு நெருக்கமான உறவைப் பேணி வந்தன.

இப்படியாக ஊடகத் துறையில் ஒரு கட்டத்தில் எழுத்து ஊடகங்கள் வகிப்பதாகச் சொல்லும் நடுநிலைமை, அவற்றின் பக்க சார்புநிலை காரணமாகப் பல்லிளிக்கத் தொடங்கியது. முன்னைய காலங்களில் ஒரு பத்திரிகையை மட்டும் வாசித்து உண்மைச் செய்தியை அறிந்த வாசகன் இந்த புதிய சூழலில், குறைந்தது  மூன்று வேறு வேறு பின்புலம் கொண்ட பத்திரிகைகளையும் ஒன்றாக வாசித்து உட்கார்ந்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டியதாக நிலைமை மாறியது. இன்னொரு வகையில் வாசகனை ஆராய்ச்சியாளனாக இயங்க வேண்டிய சூழலை ஊடகங்கள் ஏற்படுத்தின.

காலப் போக்கில்  இலங்கையிலும் இந்தியாவிலும் அரசு தமக்கு எதிரான விமர்சனங்களை கட்டுப்படுத்த  செய்தித் தணிக்கை என்ற பெயரில் பத்திரிகைகளின் சுதந்திரச் செயற்பாட்டில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியது. அதிலும் சில இனக்குழுக்கள் சுதந்திரம், தனிநாடு கோரி போராடப் புறப்பட்ட நிலையில் ஆட்சியாளர்களுக்கு இவ்வாறான கட்டுப்பாடுகளை விதிப்பது இலகுவாகியது. இலங்கையில் குறிப்பாக தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இராணுவம் பின்னடைவு அடைந்த சூழலில் இலங்கை அரசு கடுமையான செய்தித் தணிக்கையை நடைமுறைப்படுத்தியது. இதன்போது  பல பத்திரிகைகள் கறுப்புப் பக்கங்களை பிரசுரித்து அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இதே காலப் பகுதியில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையையும் பரவலாக அவிழ்த்து விடப்பட்டது.  ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் காணாமல் ஆக்கப்படுவதும் அந்த நாட்களில் வழமையாகிப் போனது. இந்த அசாதாரண சூழலில் பல சிறந்த ஊடகவியலாளர்கள் அகற்றப்பட்டனர் அல்லது நாட்டைவிட்டு வெளியேறினர்.

2000 ஆண்டளவில் மெல்ல மெல்ல இணையப் பத்திரிகைகள் அறிமுகமாகிப் பிரபலமாக ஆரம்பித்தன. பிரதான ஊடக நிறுவனங்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவையும் இணையத்தினூடாக மக்களை அணுக ஆரம்பித்தன. அதேநேரம் குறைந்த செலவில் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கக்கூடிய இந்த சூழலில்தான் தகுதியற்ற பலரும் தம்மையும் ஊடகவியலாளர் என்று சொல்லிக் கொள்ளும் சூழ்நிலையும் ஒரு மடிகணினியையும் இணைய இணைப்பையும் வைத்துக் கொண்டு ஆளுக்கொரு பத்திரிகை நடத்தக்கூடிய  சூழலும் ஏற்பட்டது.

முன்னர் நிருபர்கள் சேகரிக்கும் எந்த ஒரு செய்தியையும் சரிபார்த்தே பத்திரிகைகள் பிரசுரித்த காலம் ஒன்று இருந்தது. பல பத்திரிகை ஆசிரியர்கள் சமூகத்தில் முரண்பாடுகள், இனமோதல்களைத் தூண்டும் வகையிலான செய்திகளை பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். ஆனால் இன்றைய சூழலில் ஊடகங்கள் தாமாகவே சுய ஒழுங்குமுறையைப் பேணினாலே தவிர ஊடக தர்மப்படியும் புனைவுகள் அற்ற வகையிலும் செய்திகளைப் பிரசுரிக்கும் தன்மை குறைந்து காணப்படுகிறது.

பல இணையப் பத்திரிகைகள் மற்றவர்கள் மீது சேறு பூசுதல், அவதூறு பரப்புதல், தனி மனித ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விடயங்களை தலைப்புச் செய்தியாக்குதல்  போன்ற வேலைகளை தாராளமாகச் செய்யத் தொடங்கின. பிற பத்திரிகைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு சரிபார்க்காது செய்திகளைப் பிரசுரிப்பது, முழுமையான தகவல்கள் கிடைக்காதபோது செய்திகளை இட்டுக்கட்டி தவறான செய்திகளைப் பிரசுரிப்பது என்பவை புதிய வழமையாகவே மாறிப்போயுள்ளது.

ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டால் “இளம்பெண் கதறக் கதறக் கற்பழிப்பு” என்ற தலைப்போடு அந்தப் பெண்ணின் படத்தையும் முன்பக்கத்தில் பிரசுரித்தல், “தடுப்பூசியையும் தகர்த்தது கொரோனா வைரஸ்” போன்ற பிதற்றலான தலைப்புச் செய்தியைப் போடுதல், “உடல் எடை கூடிய அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை, ரசிகர்கள் அதிர்ச்சி !” போன்ற தேவையற்ற விடயங்களை செய்தியாக்குதல், ஒருவர் பேசியதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து எதிர்மறைச் செய்தியாக்குவது என இவர்கள் ஒரு சிறந்த செய்தித் தொடர்பாடல் முறையை துஸ்பிரயோகம் செய்து வருகிறார்கள்.

இன்று புலம்பெயர் தேசத்தில் தமிழர்கள் மத்தியில் பிரசுரமாகும் ஒரு சில பத்திரிகைகள் தவிர ஏனைய பல பத்திரிக்கைகள் இவ்வாறு அங்கு வெட்டி இங்கு ஒட்டித்தான் தமது செய்திப் பக்கங்களை நிரப்புகின்றன. இன்னும் சிலர் ஆங்கில வீடியோ செய்திகளைத் தவறாக மொழிபெயர்த்து தமது பெயரோடு சேர்த்து தமது செய்தியாக பிரசுரித்துக் கொள்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால் முன்னர் பத்திரிகைகள் சுடச்சுடச் செய்திகளைத் தந்த காலம் போய் இன்று சுட்ட செய்திகளையும் தவறான செய்திகளையும் தருபவையாக மாறிவிட்டன.

பத்திரிகைகளின் நிலைதான் இப்படியென்றால், பிரபலமான, மற்றும் ஓரளவு பிரபலமான ஊடகங்களில் வேலை செய்யும் சில ஊடகவியலாளர்களின் நிலையோ சொல்லுந்தரமன்று. இதனைவிட முறையான பயிற்சியும் அனுபவமும் அற்ற பல நவீன ஊடகவியலாளர்கள் சொந்தச் சரக்கு இல்லாத நிலையில் அங்கும் இங்கும் தனிநபர்களின் எழுத்துக்களைத் திருடி தமது ஆக்கம் போலப் பிரசுரித்து காசு பார்க்கத் தொடங்கி விட்டனர். வேறு நபர்கள் கஷ்டப்பட்டு எடுத்த புகைப்படங்களையும் திருடுவதோடு கொஞ்சமும் வெட்கமில்லாது தமது ஊடகத்தின் பெயரை அந்தப் படங்களின் மேல் பிரசுரித்து பெயர் வாங்கிக் கொள்கின்றனர். சமூக வலைத் தளங்களில் தம்மைப் பிரபலப்படுத்துவதற்காக சர்ச்சையான கருத்துகளைப் பதிவிடல், வேறு பக்கங்களில் வரும் நல்ல ஆக்கங்களை கவனமாக பிரதி செய்து தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் தமது ஆக்கம் போலப் பதிவிட்டு பெயர் வாங்க முயற்சித்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.  

தொழிநுட்ப வளர்ச்சியானது  அதனைப் பயன்படுத்தும் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நோக்கியதான மாற்றத்தை  ஏற்படுத்த வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழர்களின் பத்திரிகைத் உலகில் துறையில் ஒருபுறம் வளர்ச்சி ஏற்பட்டு இருந்தாலும் மறுபுறத்தில் இவ்வாறான பொறுப்பற்ற மற்றும் தன்னைமுன்னிலைப்படுத்த நினைக்கும் ஊடகவியலாளர்களால் தமிழ் ஊடகத்துறை பலமான பின்னடைவை பெற்றுள்ளது என்பதே கசப்பான உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *