பாதீட்டுக்குப் பின் தமிழரின் இன்றைய நிலை
எழுதியது முரளி வல்லிபுர நாதன் ( சமுதய மருத்துவ நிபுணர்)
இடதுசாரிகளாகத் தம்மைக் காட்டிக்கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது முதலாவது பாதீட்டை வெற்றிகரமாக சமர்ப்பித்து இருக்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஊழலுக்கு எதிராக ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முதலில் ஜனாதிபதி அனுரவுக்கும் பின்னர் தேசிய மக்கள் சக்திக்கும் வாக்களித்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இதுவரை நிகழ்ந்த மாற்றங்களை எடுத்துக் கவனமாக ஆராய்ந்தால் சிறுபான்மையினர் அதிலும் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பது தெளிவாகப் புலனாகிறது.

பாதீட்டை மேலெழுந்தவாரியாக பார்த்தால் வடக்கின் அபிவிருத்திக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தோன்றும். அதேவேளை கடந்த காலத்தில் பேரினவாத அரசாங்கங்கள் செய்த இராணுவமயமாக்கல் திட்டங்களுக்கு இம்முறையும் எந்த விதத்திலும் சளைக்காமல், வழமை போல் அரச ஊழியரின் சம்பளத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில் 48% ஆனது பாதுகாப்புப் படையினரின் சம்பளத்துக்கே ஒதுக்கப்பட்டு உள்ளது.
உலகில் பொது மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அதிகளவு இராணுவ மற்றும் பாதுகாப்பு படையினரை கொண்ட நாடாக இலங்கை தொடர்ந்தும் இருந்து வருகிறது(ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது ) . ஏற்கனவே தையிட்டி முதலான தமிழரிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் எதையும் விடுவிக்கமாட்டோம் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவிரித்துவிட்டது (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது ). நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற ஆளுநர், ‘பிறந்து வளர்ந்த இடங்களைக் கைவிட்டு மாற்று நிலங்களை பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று மனச்சாட்சியை அடைவு வைத்துவிட்டு ஆலோசனை வழங்குகிறார்.
இதேவேளை பிரதமர் ஹரிணியும் தேசிய மக்கள் சக்தியின் ஏனைய அரசியல்வாதிகளும் வழமையான அரசியல்வாதிகள் போல் படம் காட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாணத்தில் பல பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளில் ஒன்றான மலசலகூட வசதிகள் கூட சரியான முறையில் காணப்படவில்லை. இதன் காரணமாகப் பல சந்தர்ப்பங்களில் மாணவர்கள் பாடசாலைகளில் மலசலகூடங்களை உபயோகிக்காது தமது இயற்கைத் தேவைகளை கட்டுப்படுத்துவதால் சிறுநீர் தொற்றுக்கு உள்ளாகின்றனர். மறுபுறம் பல பாடசாலைகளில் ஆய்வுகூட வசதிகள் மிகவும் கேவலமான நிலையில் உள்ளது. குறிப்பாகத் தென்பகுதியில் தொழில்நுட்ப பிரிவுகள் உள்ள பாடசாலைகளில் உள்ள ஆய்வுகூடங்களுடன் ஒப்பிட்டால் வட பகுதிப் பாடசாலைகளின் நிலை எவ்வளவு பின்தங்கி உள்ளது என்ற உண்மை புலப்படும். உண்மை இவ்வாறு இருக்கப் புலம்பெயர் தமிழர்களின் பெரும் நிதி உதவியுடன் நிறைவான வளங்களுடன் இயங்கும் முன்னணிப் பாடசாலையான யாழ் இந்துக் கல்லூரிக்குத் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழுவுடன் சென்று படம் காட்டும் கல்வி அமைச்சர் உண்மையாக எந்தக் குறைகளை நிவர்த்தி செய்து இருப்பார் ?
அடுத்ததாக யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்று சிறுவர்களுடனும் நோயாளிகளுடனும் உரையாடி அவர்களது குறைகளை அறிவதாகப் படம் காட்டுகிறார். நூற்றுக்கணக்கான இருதய நோயாளிகள் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு அபாயத்தை எதிர்நோக்கி வட மாகாணத்தில் காத்திருக்கின்றனர். பல சத்திர சிகிச்சை கூடங்கள் யாழ் வைத்தியசாலையில் காணப்பட்ட போதிலும் மாபியாக் கும்பல் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஒரு நோயாளி ஆகக் குறைந்தது 2 1/2 வருடங்கள் காத்திருக்க வேண்டும் கூறுகிறது. இதன் காரணமாக உயிர் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நோயாளிகள் தனியார் துறையில் மாபியாக்களுக்கு 20 இலட்சம் அளவில் செலவழித்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். 20 இலட்சம் சேர்க்கமுடியாத பல ஏழைகள் இந்த 2 1/2 வருட காலத்தில் மாரடைப்பினால் நாள் தோறும் இறந்து கொண்டிருக்கிறார்கள். உயிர்காக்கும் அடிப்படை நுண்ணுயிர் கொல்லி [antibiotics] மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இல்லாத நிலை. புற்றுநோயாளர்களுக்கான மருந்துகள் அனேகமானவை அரச வைத்தியசாலைகளில் இல்லை. வெளிச் சந்தையில் அவற்றின் விலை கோடீஸ்வரர்களாலும் செலுத்த முடியாத அளவு அதிகம். இதனால் பல்லாயிரக்கணக்கான ஏழை நோயாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஏழைகளுக்கு விரைவாகச் சிகிச்சை செய்யப் பிரதமர் உதவி இருந்தால் அவர்கள் கை கூப்பி அம்மையாரைத் தொழுது இருப்பார்கள். ஆனால் இது ஒன்றும் தெரியாத மாதிரி சிறு பிள்ளைகளுடனும் உயிர் ஆபத்தற்ற ஏனைய நோயாளிகளுடனும் உரையாடி அம்மையார் எதை சாதிக்க நினைக்கிறார்?
வட்டுவாகல் பாலத்துக்கும் ஏனைய சாலை அபிவிருத்திப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கியமைக்குத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்துப் பேசும்போது ஏனைய தமிழ் உறுப்பினர்கள் கரகோஷம் செய்கிறார்கள். நெடுஞ்சாலை அபிவிருத்தி என்பது குடியேற்றத் திட்டத்தின் ஒரு உபாயம் என்ற சூழ்ச்சியை அறிய முடியாதவர்களாக இருக்கிறார்கள் தமிழர் பிரதிநிதிகள். அபிவிருத்தி என்ற போர்வையில் யாழ்நூலகம் புனர்நிர்மாணிக்கப்பட்டு கடந்தகால வரலாறு பூசிமெழுகப்பட்டுவிட்டது. காரணம் நூலகத்தின் ஒரு பகுதியையாவது புதுப்பிக்காமல் வரலாற்று ஆவணமாகப் பாதுகாக்கும் எண்ணம் எவருக்கும் இருக்கவில்லை. இதுதான் வட்டுவாகல் பாலத்துக்கும் நிகழப்போகிறது.

மேலும், கடந்த கால நெடுஞ்சாலை அபிவிருத்தியின் பின்னர் மறவன்புலவு முதல் வவுனியா வரை தமிழர்களின் பூர்விக நிலங்கள் மாற்றினத்தவர்களுக்கு கை மாறிக்கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் ‘யாழ்ப்பாணத்தானுக்குக் காணி விற்க மாட்டோம்’ என்று பிரதேசவாதம் பேசிய வன்னி மண்ணின் மைந்தர்களும் கிழக்கில் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய குற்றவாளிகளை ஆதரித்த கிழக்கு மைந்தர்களும் மாற்றினத்தவர்களுக்கு எந்தவித நாணமும் இல்லாமல் காணிகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் மிகவும் திட்டமிட்ட வகையில் வரையப்பட்ட வழிவரைபடத்தினை [Road map] மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் சகல அரசுகளும் முன்னெடுத்து வந்துள்ளன. இரண்டு அவத்தைகளைக் கொண்ட இத்திட்டத்தின் முதல் அவத்தையானது [phase 1] வடக்குக் கிழக்கு மரபுவழித் தமிழர் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையான நிலத்தொடர்பினை மதுரு ஓயா, யான் ஓயா மற்றும் மல்வத்த ஓயா ஆகிய ஆற்றுப்படுக்கைகளில் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்தித் துண்டாடுதல் ஆகும். இதன் விளைவாக வடமாகாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகியன தமது மரபு வழி நிலத்தொடர்பை இழக்கும். இரண்டாவது அவத்தையில் [phase 2] குறிப்பிட்ட சிங்களக் குடியேற்றங்களால் மாற்றமடையும் இனப்பரம்பலைப் பயன்படுத்தி மாகாண எல்லைகளை மீள் நிர்ணயம் செய்தல் ஆகும். மகாவலி அமைச்சின் மேலதிகப் பொது முகாமையாளராக 80 களில் கடமையாற்றியவரும் இந்த இரகசிய வழிவரைபடத்தினை முதன் முதலாக ஜே.ஆர். ஜெயவர்த்தன மற்றும் காமினி திசாநாயக்க ஆகியோரின் ஆசியுடன் நடைமுறைப்படுத்தியவருமான மாலிங்க ஹேமன் குணரத்தினவின் நூலான ‘ஒரு இறையாண்மை அரசுக்கு’ [for a sovereign state]என்ற நூலில் இந்தத் திட்டம் குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.
இதே வழிவரைபடத்திற்கு அமைவாகப் புதிய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் மாறாது தொடரும் குடித்தொகை மாற்றங்கள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கையையும் மாநில சுயாட்சி கோரிக்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்து வருகின்றன. குறிப்பாக, இடதுசாரிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் இந்த அரசானது முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவான தொகையான 43 பில்லியன் ரூபாக்களையே சமூக நலனோன்பிற்காக [social welfare] செலவிட உத்தேசித்துள்ள அதேவேளை, பாதுகாப்புத் துறைக்காக வழக்கம்போலவே 442 பில்லியன் ரூபாக்களைச் செலவிட உத்தேசித்துள்ளது.
இந்த உண்மையைக் கூட உணர முடியாமல் தமக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் தமிழ் தேசியவாதிகள் ஒருபுறம். ஏற்கனவே அரசியல் யாப்பு மாற்றத்தை கிடப்பில் போட்டுள்ள தேசிய மக்கள் அரசாங்கம் பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமையையும் பேணிவரும் நிலையிலும் இன்னமும் அவர்கள் மூலமாக தமிழர்கள் சம உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று மனப்பால் குடிக்கும் தமிழ் இளைஞர்கள் ஒருபுறம். புலிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் வந்து மீண்டும் தமிழர்களின் உரிமையை பெற்றுத் தருவார்கள் என்று இன்னமும் நம்பும் கனவுலகவாசிகள் சிலர். இவர்களது மாயையைப் பயன்படுத்திப் பாராளுமன்றச் சிறப்புரிமைக் கவசத்தினுள் ஒழிந்திருந்து இனத்தின் மானத்தினைக் கப்பலேற்றும் கோமாளிகள் இன்னொருபுறம்.
எனவே, இதுவரை இருந்த அரசுகளைக் காட்டிலும் ஆபத்தான வகையில் தமிழ் மக்களுடன் ‘இறங்கிப் பழகும்’ தந்திரோபாயத்தினைக் கையிலெடுத்துப் பேரினவாத வழிவரைபடத்தினை இற்றைப்படுத்த முற்படும் இந்த அரசு குறித்துத் தமிழர்கள் அனைவரும் விழிப்படைய வேண்டிய கடைசித் தருணம் இது.
இல்லையேல் மாகாண சபைகளையும் பிரதேச சபைகளையும் ஆளும் தரப்பிடம் இழந்து, கட்டியுள்ள கோவணத்தையும் பறிகொடுத்த சுடலையாண்டிகளாக ஈழத் தமிழர்கள் தவிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
Dr முரளி வல்லிபுரநாதன்
21.2.2025