அநுராதபுரம், அடமஸ்தானத்தின் மீது தனியான அன்பும், மரியாதையும் உண்டு

அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி வளாகத்தில் உள்ள சன்னிபாத மண்டபத்தில் ஸ்ரீ மஹா போதி அபிவிருத்தி நிதியத்தின் உறுப்பினர்களுடன் நேற்று (13) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர்,
“பிரதமர் பதவியுடன் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பல பொறுப்புகளுக்கு மத்தியில் இந்தப் பொறுப்பைப் பற்றியும் அறிந்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தெற்கில் பிறந்து வளர்ந்து கொழும்பு நகரில் வாழ்ந்தாலும் வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுரம் மற்றும் அடமஸ்தானத்தின் மீது எனக்கு தனியான அன்பும் மரியாதையும் உண்டு. ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசேய அருகில் இருப்பதை விட எனது மனதிற்கு ஆறுதலை தரும் வேறெதுவும் இல்லை” எனவும் சுட்கக்காட்டினார்.
இந்நிகழ்வில் அடமஸ்தானாதிபதி சாகித்யசூரி கலாநிதி பல்லேகம ஹேமரத்ன மகாநாயக்க தேரர், சியம் மகா நிகாயவின் வடமத்திய மாகாண தலைமை சங்கநாயக்க தேரர் ஈத்தலவெட்டுனுவெவே ஞானதிலக நாயக்க தேரர், சியம் மகா நிகாயவின் வடமத்திய மாகாண தலைமை அதிகரண சங்கநாயக்க தேரர் லங்காராம சைத்தியாதிகாரி சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி நாயக்க தேரர், இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அபயகிரி சைத்யராமாதிபதி கலாநிதி கல்லஞ்சிய ரத்னசிறி நாயக்கதேரர், தூபாராம சைத்தியாதிகாரி சங்கைக்குரிய கஹல்லே ஞானின்த நாயக்க தேரர் ஆகியோர் பங்குபற்றினர்.
ஜய ஸ்ரீ மஹா போதி அபிவிருத்தி நிதியத்தின் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் பிரதமரிடம் உள்ளதுடன், பிரதமராக பதவியேற்ற பின்னர் அவர் இதில் ஈடுபடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இங்கு ஸ்ரீ மஹா போதி அபிவிருத்தி நிதியத்தின் தற்போதைய தலைவர் அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய பிரதமரை வரவேற்று அபிவிருத்தி நிதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். அதன் செயலாளர் தேமிய ஹுருல்லே ஸ்ரீ மஹா போதி அபிவிருத்தி நிதிச் சட்டம் மற்றும் அதன் ஆரம்பம் குறித்து விளக்கினார்.
நிதியத்தினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் ஜய ஸ்ரீ மஹா போதி உட்பட புனித பூமியின் பாதுகாப்பு மற்றும் ஏனைய அடமஸ்தானங்கள் தொடர்பில் நிதியத்தின் நிர்வாகச் செயலாளர் சரத் விஜேசிங்க பிரதமரிடம் தெரிவித்தார். மேலும் இந்த அபிவிருத்தி நிதியானது எதிர்கால பணிகளுக்கு முடியுமான அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் பிரதமர் இங்கு தெரிவித்தார்.
மேலும் இங்கு அடமஸ்தானாதிபதி சாகித்யசூரி கலாநிதி பல்லேகம ஹேமரத்ன மகாநாயக்க தேரர் அவர்கள் தங்கவேலி நிதியத்தினால் வெளியிடப்பட்ட “ஜய ஸ்ரீ மஹா போ சிரிதா” என்ற நூலை பிரதமருக்கு அறிமுகம் செய்து வைத்து புத்தகத்தை வழங்கிவைத்தார். ஆயிரம் பாடசாலை நூலகங்களுக்கு இந்நூலின் ஆயிரம் பிரதிகள் வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீ மஹா போதி அபிவிருத்தி நிதியத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

