பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்ற காஷ் படேல் – FBI அமைப்பின் 9ஆவது இயக்குநராக கடமையேற்பு

அமெரிக்காவின் உயரிய தேசிய புலனாய்வு அமைப்பான “FBI” இன் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள 44 வயதான காஷ் படேல் பகவத் கீதை மீது கைவைத்து சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் ஏற்றது இந்திய கலாசாரத்தை பெருமையை பிரதிபலிப்பதாக உள்ளது என அவரின் மாமாவான கிருஷ்ணகாந்த் படேல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்த காஷ் படேல் நியூயார்க்கில் பிறந்திருந்தாலும் அவரது பூர்விகம் குஜராத் மாநிலம் வதேராவைச் சேர்ந்தது.
இதுகுறித்து கிருஷ்ணகாந்த் படேல் கூறும்போது,
“வெளிநாட்டில் இந்திய கலாசாரம் இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது என்பதற்கு மருமகன் காஷ் படேலின் பதவிப்பிரமாணம் நிகழ்கால சான்றாக அமைந்துள்ளது. FBI இயக்குநராக நியமனம் செய்யப்பட்ட பிறகு அவர் பகவத் கீதையின் மீது கைவைத்து சத்தியம் செய்து தனது பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டுள்ளார். இது, அவர் இந்திய கலாசாரத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இது, மிகப் பெரிய விஷயம். இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளில் இந்திய கலாசாரத்தை விட்டுக்கொடுக்காமல் கடைபிடித்து வெளிநாட்டிலும் அதனை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும்.
காஷ் படேலைப் பொருத்தவரையில் குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பத்ரன் கிராமம்தான் அவர்களது பூர்விகம். நாங்களும் இங்குதான் வசித்து வருகிறோம். FBI இயக்குநராக நியமிக்கப்பட்ட பிறகு காஷ் படேலுடன் நான் பேசவில்லை. விரைவில் அவரை சந்திப்பேன்” இவ்வாறு கிருஷ்ணகாந்த் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் நம்பிக்கைக்குரியவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் FBI இன் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவருக்கு செனட் சபையில் 51 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து FBI அமைப்பின் 9ஆவது இயக்குநராக கடந்த வியாழக்கிழமை (20) பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்காவில் முதன்மை சட்ட அமலாக்க முகமைக்கு இந்திய-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.

