ஓமந்தை விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை.!

வவுனியா, ஓமந்தை விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்தி சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
வவுனியா, ஓமந்தையில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்குக்கு இன்று (11.04) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அதன் தேவைப்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார். அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்னி மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கு ஓமந்தையில் அமைந்துள்ளது. அங்கு பல தேவைகள் காணப்படுகின்றன. பயிற்சிகளை வழங்குவதற்கான பயிற்றுவிப்பாளர்கள், அதற்கான உபகரணங்கள் என பல தேவைப்பாடுகள் இருக்கின்றன. அவற்றை எதிர்வரும் காலங்களில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வடமாகாணத்தில் உள்ளக விளையாட்டுப் பயிற்சிகள் மற்றும் மெய்வல்லுனர் பயிற்சிகள் என்பவற்றை எதிர்காலத்தில் வழங்கக் கூடியதாக இருக்கும். இந்தப் பிரதேசத்தில் நீச்சல் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
விளையாட்டுத் துறையை வவுனியா மாவட்டத்தில் சிறப்பாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞர்களிடையே காணப்படுகின்ற தீய பழக்கவழக்கங்கள், மது பாவனை, தொலைபேசி பாவைனை, போதைப் பொருள் பாவனை என்பவற்றை கட்டுப்படுத்துவதற்கு விளையாட்டு துறை அவசியம். அந்தவகையில் இந்த விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதன்போது, அமைச்சருடன் கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஆகியோரும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
