“நட்பில்லாத நாடுகள்” ரஷ்யாவின் எரிபொருளுக்கு ரூபிள் மூலம் கட்டணம் செலுத்தவேண்டுமென்ற புத்தினின் ஆசை நிறைவேறாது.
தனது நாட்டின் மீது நட்பாக நடந்துகொள்ளாத நாடுகள் ரஷ்யாவிடம் கொள்வனவு செய்துகொள்ளும் எரிபொருளுக்கான விலையை ஷ்ய நாணயமான ரூபிளில் செலுத்தவேண்டும் என்று ஜனாதிபதி புத்தின் இரண்டு நாட்களுக்கு முன்னர் மிரட்டியதை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் முழுவதுமாக உதாசீனம் செய்திருக்கிறார்கள்.
ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யும் எரிபொருளில் பெரிதும் தங்கியிருக்கும் நாடுகளான ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாட்டின் தலைவர்களோ அதைச் செய்யத் தயாராக இல்லை என்று சொல்லிவிட்டார்கள். “ஏற்கனவே எழுதப்பட்ட ஒப்பந்தம் இருக்கிறது, அதன்படி எவ்ரோவில் தான் கட்டணம் செலுத்தப்படும்,” என்று இத்தாலிய, ஜேர்மனியப் பிரதமர்கள் கூறினர்.
ஸ்லோவேனியப் பிரதமரோ “ரூபிள் எப்படியிருக்குமென்றே ஐரோப்பியர்கள் எவருக்கும் தெரியாது. எவரும் அந்த நாணயத்தில் விலை கொடுக்கப்போவதில்லை,” என்று அசட்டையாகச் சாடியிருக்கிறார்.
“எழுதப்பட்டிருக்கும் ஒப்பந்தங்களை மீறும் நிலைக்குப் புத்தின் போவாரானால், அது போன்ற பல விடயங்களையும் நாம் கவனிக்கலாம்,” என்று பெல்ஜியப் பிரதமர் குறிப்பிட்டார்.
சமீப வாரங்களில் பல கட்டங்களிலும், திசைகளிலும் நடந்துவரும் வர்த்தக, அரசியல், பொருளாதாரப் பேச்சுவார்த்தைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிபொருள் தேவைகளுக்கான தீர்வுகளைத் தேடுவதில் ஒருமைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்