எரிசக்திப் பாவனைக்கான அவசரகாலத் திட்டத்தைத் தயார் செய்திருக்கிறது ஜேர்மனி.
உக்ரேனுடன் ரஷ்யா போரில் ஈடுபட முன்னர் தனது எரிசக்தியில் சுமார் 55 விகிதத்தை ரஷ்யாவிடம் கொள்வனவு செய்து வந்தது ஜேர்மனி. கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி தனது நாடு விற்கும் எரிசக்திக்கான கட்டணத்தை ரூபிள் நாணயத்தில் தரவேண்டும் என்று அறிவித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது. அதையடுத்து, தனது நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு வருமானால் அதை எதிர்கொள்வதற்கான அவசரகாலத் திட்டத்தைத் தயார் செய்திருக்கிறது.
கத்தாருடன் நீண்டகால எரிசக்தி ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது ஜேர்மனி. – வெற்றிநடை (vetrinadai.com)
அறிவிக்கப்பட்டிருகும் அவசரகாலத் திட்டத்தின் காரணம் எச்சரிக்கையாக இருப்பதே தவிர தற்போதைய நிலைமையில் எரிவாயுவுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்று நாட்டின் தொழில்துறை அமைச்சர் பீட்டர் ஹாபக் குறிப்பிட்டார். தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படியென்பதை அறிவித்து அதற்குத் தயார்படுத்துவதே அந்த அறிவிப்புக்குக் காரணம் என்றார் அவர்.
அவசரகால நிலைமைத் திட்டத்தின் முதல் கட்டமாக ஒரு குழுவினர் நாட்டின் கையிருப்பிலிருக்கும் எரிவாயு அளவை உடனுக்குடன் தெரிந்துகொள்வார்கள். அந்த நிலைமைக்கேற்ற நடவடிக்கைகள் எடுப்பதில் ஒரு பகுதியாக குறிப்பிட்ட பாவனையாளர்கள் எரிவாயு இணைப்புக்களிலிருந்து வெளியேற்றப்படலாம்.
அவசரகால நிலைமையின் கடைசிக் கட்டத்தில் எரிவாயுக் கையிருப்புக் குறையுமானால், நாட்டு மக்களின் வீட்டுப்பாவிப்புக்கான எரிவாயு தொடர்ந்தும் விநியோகிக்கப்படும். அச்சமயத்தில் தொழிற்சாலைகள் போன்ற பெரும் கொள்வனவாளர்களுக்கு விநியோகிக்கப்படும் எரிசக்தியின் அளவு குறைக்கப்படும் அல்லது முழுவதுமாக நிறுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஜேர்மனி தான் ரஷ்யாவில் கொள்வனவு செய்யும் எரிசக்தியின் அளவைக் குறைத்து தற்போது தனது தேவையில் 40 % ஐ மட்டுமே அங்கிருந்து பெற்றுக்கொள்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்