அமெரிக்காவில் பெரும்பாலான பிள்ளைகளின் இறப்புக்கு 2020 இல் காரணமாக இருந்தவை துப்பாக்கிச்சூடுகளே.
வோஷிங்டனில் கடந்த வார இறுதியில் நடந்த துப்பாக்கிச் சூடுகளைப் பற்றிப் பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்த நகரபிதா சமீபத்தில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தினால் செய்யப்பட்ட ஆராய்ச்சியொன்றின் முடிவை மேற்கோள் காட்டினார். அமெரிக்காவில் இளவயதினரிடையேயான மரணங்கள் பற்றிய புள்ளிவிபரங்களை அலசிச் செய்யப்பட்டது அந்த ஆராய்ச்சி. அதன்படி 2020 இல் பெரும்பாலான இளவயதினரின் மரணங்களுக்கு அமெரிக்காவில் காரணமாக இருந்தது துப்பாக்கிச் சூடுகளே என்கிறது.
அதுவரை இளவயதினரிடையே நடக்கும் மரணங்கள் வீதி விபத்துக்களாலேயே ஏற்பட்டு வந்தன. அவ்விடயத்தில் துப்பாக்கிச் சூட்டு மரணங்கள் 30 விகிதத்தால் அதிகரித்து விட்டிருக்கின்றன. 1 வயதிலிருந்து 19 வயதானவர்களுக்கு இடையேயான மரணங்களில் பெரும்பாலானவை துப்பாக்கிச் சூடுகளால் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளில் தற்கொலைகளும், கொலைகளும் அடங்கும். அது தொடர்ந்தும் கடந்த இரண்டு வருடங்களாக அதிகரித்தே வருகின்றது.
ஆராய்ச்சியாளர்களாலோ, சமூகசேவை அதிகாரத்தினாலோ நிலைமை மாறியிருப்பதற்கான தெளிவான காரணத்தைச் சுட்டிக்காட்ட முடியவில்லை. 2020 கொரோனாத்தொற்றுக் காலத்தில் நாட்டின் கீழ்த்தட்டு மக்களிடையே ஏற்பட்ட பொருளாதார நலிவினால் ஏற்பட்ட சமூக மாறுதல்களும், அதிகரித்த மன அழுத்த நிலைமையும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எப்படியாயினும், அமெரிக்கா கொரோனாத் தொற்று என்ற பெரும் அபாயக் காலத்தைத் தாண்டி துப்பாக்கிச்சூடுகள் தொற்றலையாகப் பரவியிருக்கும் நிலைமை கவனிக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டு மரணங்களின் அதிகரிப்பு வோஷிங்டனில் மட்டுமன்றி அமெரிக்க மாநிலங்கள் அனைத்திலும் காணக்கூடியதாக இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்