கொலொனியல் பைப்லைனிடம் பறிக்கப்பட்ட கப்பத்தொகையை அமெரிக்கா மீட்டுவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

“டார்க்சைட்” என்ற பெயரில் செயற்படும் ஒரு குழுவினர் அமெரிக்காவின் மிகப்பெரிய பெற்றோலிய விநியோக நிறுவனமான கொலொனியல் பைப்லைன் கொம்பனியின் இணையத்தளத்தைக் கடந்த மாதம் தொலைத்தொடர்பு மூலம் தாக்கிக் கைப்பற்றியிருந்தார்கள். விளைவு, அந்த நிறுவனத்தின் குளாய்களனைத்தும் செயற்பாடிழந்தன. தமது இணையத்தளத்தை மீண்டும் தமது பொறுப்பில் கொண்டுவருவதற்காக “டார்க்சைட்” குழுவினருக்கு அந்த நிறுவனம் 5 மில்லியன் டொலர்களைக் கப்பமாகக் கட்டவேண்டியிருந்தது.

https://vetrinadai.com/news/darkside-east-coast/

அந்த நிறுவனத்தின் கப்பத்தொகை பிட்கொய்ன் என்றழைக்கப்படும் டிஜிடல் பணமதிப்பில் பறிக்கப்பட்டது. அந்த 63.7 பிட்கொய்ன்களை அமெரிக்க அரசின் குற்றவியலாளர்கள் மீட்டெடுத்திருப்பதாக அரச தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. சமீப வாரங்களில் பிட்கொய்ன் மதிப்பு குறைந்திருப்பதால் மீட்கப்பட்டவைகளின் பெறுமதி 3.2 மில்லியன் டொலர்களாகும்.

சமீப வருடங்களில் இணையத்தளங்களின் மூலம் தாக்குதல் நடாத்திப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கப்பம் பறிக்கும் குற்றவாளிக் குழுக்களின் தாக்குதல்கள் அதிகமாகியிருக்கின்றன. அப்படியான நிறுவனங்களின் மையம் பெரும்பாலும் அமெரிக்காவிலிருப்பதால் இது அமெரிக்க அரசுக்குப் பெரும் தலையிடியாகியிருக்கிறது. எனவே ஜோ பைடன் அரசு இப்படியான குற்றங்களில் ஈடுபடுவோரை நோக்கிச் செயற்படும் சட்டங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறார். அதற்காக இணையத்தள விற்பன்னர்களும் பதவிகளிலமர்த்தப்பட்டுச் செயற்பட்டு வருகிறார்கள்.

கொலனியல் பைப்லைன் நிறுவனம் கப்பத்தொகை கொடுக்கும் விடயம் திட்டமிடப்பட்டவுடனேயே அமெரிக்காவின் குற்றவியலாளர்கள் அப்பணத்தின் வழியை, மாற்றங்களைக் கணித்து அதன்மூலம் அவற்றைக் கைப்பற்றுவதில் வெற்றிகொண்டிருகிறார்கள். பொதுவாக பிட்கொய்ன் மூலம் கொடுக்கப்பட்ட கப்பங்களைத் திருப்பிப் பெறமுடிவதில்லை.

விரைவில் ரஷ்யாவின் ஜனாதிபதி புத்தினைச் சந்திக்கவிருக்கும் ஜோ பைடன் இதுபோன்ற பொருளாதாரக் கப்பங்களில் ஈடுபடும் குழுக்களை வலைவீசிப்பிடித்த, தண்டித்தல் பற்றிய விடயங்களில் ஒன்றிணைந்து செயற்படுவது பற்றிப் பேசவிருப்பதாகத் தெரிகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *