“நான் 2024 இல் ஜனாதிபதித் தேர்தலில் இறங்கக்கூடும், அதுபற்றி அடுத்த வருடம் சொல்வேன்,” என்கிறார் ஜோ பைடன்.

இந்த நவம்பர் 20 திகதி 80 வயதை அடையும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தான் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார். அவருக்கான ஆதரவு டெமொகிரடிக் கட்சியினரிடையே வீழ்ச்சியடைந்திருப்பதும், அவரது முதுமையும் சேர்ந்து டெமொகிரடிக் கட்சியினரிடையே அவரை மீண்டும் வேட்பாளராக்குவதற்கான சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தனது பொது நிகழ்ச்சிகளில் விபரங்களைப் பிழையாகப் பேசுதல் பல தடவைகள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் அவர் தனது மகனின் இறப்பைப் பற்றித் தவறாகக் குறிப்பிட்டதுடன், ஈராக் போரையும், உக்ரேன் போரையும் மாற்றிக் குறிப்பிட்டார். 

இடைத்தவணைத் தேர்தல்களின் முடிவுகள் தொடர்ந்தும் வெளியாகி வருகின்றன. வந்திருக்கும் முடிவுகள் பற்றி ஜோ பைடன் தனது கருத்தை வெளியிட்டிருந்தார். டெமொகிரடிக் கட்சியினர் பெருமளவில் தோல்வியைக் கவ்வக்கூடும் என்பதற்குப் பதிலாகத் தேர்தலில் அவர்கள் ஓரளவு நல்ல முடிவுகளையே பெற்று வருவதைச் சுட்டிக்காட்டி, “ஜனநாயகத்துக்கு அது நல்ல செய்தி” என்று ஜோ பைடன் குறிப்பிட்டார். 

இதுவரை வெளியாகியிருக்கும் இடைத்தவணைத் தேர்தல்களின்படி ரிபப்ளிகன் கட்சியினர் பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையான 218 இடங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் 207 இடங்களைப் பெற்றிருக்க டெமொகிரடிக் கட்சியினர் 184 இடங்களையே பெற்றிருக்கிறார்கள்.

செனட் சபைக்கான இடங்களின் போட்டியில் ஆளுக்கு 48 இடங்களை இருவரும் பெற்றிருக்கிறார்கள். வெளியாகாமலிருக்கும் தொகுதிகளில் இவ்வார இறுதியிலும் அடுத்த வாரத்திலும் முடிவுகள் வெளியாகும் என்று கணிக்கப்படுகிறது. ஜியோர்ஜியா மாநிலத்தில் வெற்றிபெறுபவர் 50 % வாக்குகளைப் பெறவேண்டும். அதை அங்கே எவருமே பெறாததால் இரண்டாம் கட்டத் தேர்தல் முதலிரண்டு முன்னணி வேட்பாளர்களிடையே டிசம்பர் மாதத்தில் நடைபெறும். அத்தேர்தலே அனேகமாக செனட் சபையில் யார் பலமானவர் என்பதைத் தீர்மானிக்கும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *