சூறாவளி இயனின் தாக்குதலால் புளோரிடாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் 17 பேர் இறப்பு.

கியூபாவில் மக்களுக்கு மின்சாரமே இல்லாமல் செய்யவைத்துவிட்டு வானிலை அறிக்கையாளர்கள் கணித்ததுபோலவே அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைத் தாக்கியது சூறாவளி இயன். அங்கே அது சுமார் 20 பேரின் உயிரைக் குடித்திருப்பதாக வெளியாகிய செய்திகள் குறிப்பிடுகின்றன. இறந்தவர்களின் எண்ணிக்கை மேலதிக விபரங்கள் வெளியாகும்போது அதிகரிக்கும். அதன் வீச்சின் உக்கிரம் குறைந்து மீண்டும் அதிகரித்திருக்கிறது.  அடுத்தாக இயன் தெற்கு கரோலினா மாநிலத்தின் கரையோரப்பகுதிகளைத் தாக்குகிறது.

கிழக்குக் கரையோரப் பகுதிகளிலிருக்கும் மா நிலங்களில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. புளோரிடாவில் இயன் ஏற்படுத்திய சேதங்களைச் சரிசெய்ய பல வருடங்களாகலாம் என்கிறார் மாநிலத்தின் ஆளுனர். அதையும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் சூறாவளி இயன் போன்ற ஒரு இயற்கை அழிவை ஏற்படுத்தும் நிகழ்வு 500 வருடங்களாக நடந்ததில்லை என்று விபரிக்கப்படுகிறது. அமெரிக்காவின் சரித்திரத்தில் ஐந்தாவது மோசமான சூறாவளி இயன் புளோரிடா மாநிலத்தின் மோசமானவைகளில் முதலாவது என்று குறிப்பிடப்படுகிறது.

மீட்புப் படையினரின் செய்திகளின்படி முழுவதுமாக நீருக்குள் மறைந்துவிட்ட குடியிருப்புக்கள் பல. அவைகளிலிருந்து தாம் சுமார் 700 பேரைக் காப்பாற்றியதாகக் குறிப்பிடுகிறார்கள். 

ஜனாதிபதி ஜோ பைடன் புளோரிடாவை இயற்கை அழிவுப் பகுதியாகப் பிரகடனப்படுத்தி, புனருத்தாரண வேலைகளுக்காக அரசின் நிதியுதவிகள் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பகுதிகளைப் பார்வையிடத் தான் நேரே வருவதாகவும் உறுதியளித்திருக்கிறார். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *