“காபுலிலிருந்து அமெரிக்காவால் கத்தாருக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள் மோசமாக நடாத்தப்படுகிறார்கள்.”

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பிய நூற்றுக்கணக்கானோர் காபுலிலிருந்து அமெரிக்க விமானத்தில் கத்தாருக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கே தமது தங்குமிடம், அதன் வசதிகள் படு மோசமாக இருப்பதாக அவர்கள் புகார் செய்து வருகிறார்கள். அப்புகார்கள் காபுலிலிருக்கும் ஆப்கான் தூதரக ஊழியர்களால் வெளியிடப்பட்டு அமெரிக்காவின் நடத்தையை விமர்சிக்கிறது.

கத்தாரில் அல் – உடெய்ட் விமானத் தளப் பிராந்தியத்தில் தனது முக்கிய இராணுவ முகாமை அமெரிக்கா வைத்திருக்கிறது. அமெரிக்காவுக்குப் போக விரும்பும் ஆப்கானர்களை அங்கே கொண்டு சென்று பதிவுகள், விண்ணப்ப ஆராய்வு போன்றவற்றைச் செய்ய கத்தார் ஒத்துழைக்கிறது. 2022 இல் அங்கே நடக்கவிருக்கும் உலகக் கால்பந்தாட்டப் போட்டி வீரர்கள் தங்கத் தயாரிக்கப்பட்டிருக்கும் மண்டபமொன்றில் ஆப்கானர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடும் கோடை நிலவும் கத்தாரில் தாம் தங்கவைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தில் குளிருட்டிக் கருவி இல்லையென்றும், சுமார்  500 பேருக்கு இரண்டே இரண்டு மலசல கூடங்களே இருப்பதாகவும் அகதிகளிடமிருந்து புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கிருப்பவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாகும். அத்துடன் மேலும் சில நூறு பேரை அமெரிக்க விமானங்கள் அங்கே கொண்டுவரவிருக்கின்றன. 

கத்தார் நிலைமை வெளியானதும், காபுலிலிருக்கும் ஆப்கானியத் தூதுவராலய ஊழியர்கள் தாமும் தங்களின் குடும்பத்தினரும்கூடக் கத்தாருக்குக் கொண்டுசெல்லப்படுவதைப் பற்றி அமெரிக்காவின் நடவடிக்கைகளில் சந்தேகம் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அமெரிக்காவுக்குக் குடியிருப்பு அனுமதி கிடைக்கும்வரை கத்தாரில் நீண்ட காலம் அவர்கள் தங்கவேண்டியிருக்கலாம். அப்படியானால், அங்கிருக்கும் நிலைமை மனிதர்களுக்கானதல்ல, மிருகங்களுக்கானதே என்றும், அதை விடத் தலிபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானே மேலென்றும் சிலர் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *