ரஷ்ய நிலைப்பாடு மாறி, ஆப்கானிஸ்தானிலிருந்து முன்னாள் சோவியத் குடிமக்களை வெளியேற்றி வருகிறது.

தலிபான் இயக்கத்தினர் ஒரு தீவிரவாத இயக்கம் என்று ரஷ்யாவில் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்பட்டிருக்கிறது. சமீப வாரத்தில் அவர்களுடன் சுமுகமான உறவை வைத்திருக்கலாமா என்ற எண்ணம் எழுந்திருந்தது. அத்துடன் மேற்கு நாடுகளுக்கும் தலிபான் இயக்கங்களுக்குமிடையே சுமுகமான உறவை உண்டாக்கும் நடுவராகலாம் என்றும் ரஷ்யா குறிப்பிட்டிருந்தது. ஆனால், மீண்டும் தமது எண்ணங்களிலிருந்து மாறி காபுலிலிருக்கும் முன்னாள் சோவியத் குடிமக்களை வெளியேற்ற ஆரம்பித்திருக்கிறது ரஷ்யா. 

ஜனாதிபதி புத்தின் உத்தரவிட்டிருந்ததை அனுசரித்து காபுலிலிருந்த ரஷ்ய ராஜதந்திரிகள் உட்பட தாஜிகிஸ்தான், உக்ரென், பெலாரூஸ், கிரிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாட்டுக் குடிமக்கள் 500 பேருக்கும் அதிகமானவர்களை அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். காபுல் தலிபான்களின் கையில் விழுந்த ஆரம்பக்கட்டத்திலேயே ரஷ்யா அங்கிருந்த தூதுவராலய ஊழியர்கள் ஒரு பகுதியினரை வெளியேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காபுலில் மற்றும் அந்த விமான நிலையப் பிராந்தியத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கையை மேற்கு நாடுகளைப் போலவே ரஷ்யாவும் வெளிப்படுத்தியிருக்கிறது. செவ்வாயன்று தலிபான்களின் ஊடகத் தொடர்பாளர் ஒருவர் “நாம் சீனாவுடனும், ரஷ்யாவுடனும் நட்புறவைக் கொண்டிருக்கிறோம்,” என்று குறிப்பிட்டிருந்தார். 

தாஜிக்கிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் பல்லாயிரக்கணக்கான ஆப்கான் அகதிகள் கூடிவருகிறார்கள். தனது சகோதர நாடுகளைப் பாதுகாப்பதாக அறிவித்திருந்த ரஷ்யா அந்த எல்லையில் மேலும் அதிக பீரங்கி வாகனங்களைக் குவித்திருப்பதுடன் போர் விமானப் பயிற்சியொன்றை நடாத்தியிருக்கிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *