சென்ற்.பீற்றர்ஸ்பெர்க் தேர்தலில் ஒரே பெயர் + முக உருவத்தில் மூவர் போட்டியிடுகிறார்கள்.
ரஷ்யாவில் விரைவில் நடக்கவிருக்கும் தேர்தலில் எதிர்க்கட்சிகளை வீழ்த்த ஆளும் கட்சிகள் சகல ஏமாற்று வேலைகளையும் பார்ப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. சென்ற்.பீற்றர்ஸ்பெர்க் நகரின் பிரபல எதிர்க்கட்சித் தலைவரை விழ்த்த அவரைப் போன்று சமீபத்தில் தமது பெயர்களை மட்டுமன்றி, முகத்திலும் மாற்றங்கள் செய்துகொண்டவர்கள் போட்டியிடுகிறார்கள்.
Boris Vishnevsky என்பவர் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரான சென்ற்.பீற்றர்ஸ்பெர்க்கின் பிரபல அரசியல்வாதி. அந்த நகரின் பாராளுமன்ற உறுப்பினரான அவர் தனது இடத்துக்கு மீண்டும் போட்டியிடுகிறார். ஜனாதிபதி புத்தின் கட்சி வெற்றிபெற அதிக வாய்ப்பில்லாததால் அவரை எதிர்க்க அவருடைய பெயரிலேயே மேலுமிரண்டு வேட்பாளர்கள் அத்தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அது மட்டுமன்றி வேட்பாளர்கள் படத்தில் அவர்கள் தமது முகத்தோற்றத்தையும் Boris Vishnevsky மாதிரியே மாற்றிக்கொண்டிருப்பதைப் பற்றி அவர் தேர்தல் ஆணையாளர்களிடம் சுட்டிக் காட்டினார்.
தமது எதிரிகளைத் தோற்கடிக்க அதே பெயரிலான வேட்பாளர்களை நிறுத்துவது ரஷ்யத் தேர்தல்களில் நீண்டகாலமாகவே வழக்கம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், Boris Vishnevsky க்கு எதிராகத் தேர்தலில் நிற்பவர்கள் சமீப காலம் வரை முகத் தோற்றத்திலும் வித்தியாசமாக இருந்ததிருக்கிறார்கள்.
ரஷ்ய தேர்தல் ஆணையத்தின் தலைவர் எல்லா பம்விலோவா நடந்திருப்பதை, “கீழ்த்தரமானது, வாக்காளரின் முகத்தில் கரிபூசுவது,” என்று விமர்சித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்
