எதிர்ப்பு ஊர்வலங்களுக்குத் தடை, சமூகத்தில் பெண்களின் பங்கெடுப்புக்குக் கட்டுப்பாடுகள் – தலிபான் அரசு 2:0.

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் தலிபான் இயக்கத்தினரின் அரசாங்கம் தனது முக்கிய சட்டங்களை அறிவிக்க ஆரம்பித்திருக்கிறது. பெண்கள் சமூகத்தில் எந்தெந்த விடயங்களில் பங்கெடுக்கலாகாது என்பதைத் தவிர எதிர்ப்பு ஊர்வலங்களில் எவருமே பங்கெடுக்கலாகாது என்றும் உள்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது.

கடந்த வாரங்களில் ஆப்கானிஸ்தானின் வெவ்வேறு நகரங்களில் தலிபான்கள் சமூகத்தில் பெண்களின் பங்கெடுப்பைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று கோரி எதிர்ப்புக் கூட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டு வந்தன. அவை ஆங்காங்கே தலிபான் இயக்கத்தினரால் வன்முறையால் நிறுத்தப்பட்டு வந்தன. வியாழனன்று உள்துறை அமைச்சரவையால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை இனிமேல் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்துவதை அரசு பொறுக்காது என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்ரேலியத் தொலைக்காட்சியில் பேட்டியளித்த ஆப்கானியக் கலாச்சார மையத்தின் தலைவர் அஹ்மதுல்லாஹ் வசீக், “பெண்கள் கிரிக்கட் போன்ற விளையாட்டுகளில் பங்குபற்றுவது அவசியமல்ல. ஏனெனில், அச்சமயத்தில் அவர்களால் தமது முகங்களையும், உடலையும் மறைக்க முடியாது. அதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை,” என்று குறிப்பிட்டிருந்தார்.

காபுல் பல்கலைக்கழகங்களில் வகுப்புக்களில் பெண்கள், ஆண்கள் தனியாகக் கற்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவு போடப்பட்டிருக்கிறது. பெண்கள் பெண்களுக்கும், ஆண்கள் ஆண்களுக்கும் கற்பிக்கவேண்டும். அதற்கான வசதிகள் இல்லாத பட்சத்தில் வகுப்புக்களில் இருபாலாருக்கும் இடையே திரை போடப்படவேண்டும் என்பது உத்தரவு. கல்விக்கூடங்களில் அதற்குத் தேவையான அளவு இடவசதியோ, ஆசிரியர்கள் வசதியோ கிடையாது என்கிறார்கள் பல்கலைக்கழக உயரதிகாரிகள். அதன், பக்க விளைவு தாம் மாணவிகளுக்கு வகுப்புக்கள் நடத்த முடியாத நிலையாகும் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானுக்கான மனிதாபிமான உதவிகளைத் தொடர்வதற்கும், பாவிக்கவியலாமல் நிறுத்தப்பட்டிருக்கும் அவர்களுடைய மத்திய வங்கியின் பணத்தைத் தலிபான்கள் பாவிக்க அனுமதிக்கப்படுவதற்கும், அந்த நாட்டின் தலிபான் அரசை அங்கீகரிக்கப்படுவதற்கும் அவர்களின் மனித உரிமைகள் மதிப்பே அளவீடாக இருக்கும் என்று உலக நாடுகள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் தலிபான் இயக்க அரசால் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் நம்பிக்க தருவதாக இல்லை என்று ஐ.நா குறிப்பிட்டிருக்கிறது. பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளும் ஜனநாயக ரீதியில் அமைதியாக நடாத்தப்படும் ஊர்வலங்களைக் கட்டுப்படுத்துவதைக் கண்டித்திருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *