குர்தீஷ் இயக்கங்கள் மீதான துருக்கியின் தாக்குதல் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்குச் சாதகமாக அமையலாம்.

ஒரு வாரத்துக்கு முன்னர் இஸ்தான்புல் வியாபார வீதியில் வெடித்த குண்டு குர்தீஷ் போராளிகளின் வேலையே என்கிறது துருக்கி. அதற்குப் பழிவாங்க அந்தப் போராளிகளின் மையங்கள் என்று குறிப்பிடப்படும் சிரியப் பிராந்தியங்களில் தனது தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றிருக்கிறது துருக்கி. விமானத் தாக்குதல்களில் ஆரம்பித்த துருக்கி காலாட்படைகளையும் சிரியாவுக்குள் அனுப்பத் தயாராகி வருகிறது.

துருக்கியால் தீவிரவாதிகள் என்று சுட்டிக்காட்டப்படும் குர்தீஷ் இயக்கங்கள் அமெரிக்காவின் ஆதரவையும், ஆயுதங்களையும் பெற்று சிரியாவில் பரவியிருந்த இஸ்லாமியக் காலிபாத் அரசுக்கெதிராகப் போராடியவை ஆகும். துருக்கி அந்தப் பிராந்தியங்களில் விமானத் தாக்குதல்களை நடத்துவது இது முதல் தடவையல்ல. காலிபாத் அமைத்திருந்த ஐ.எஸ் உட்பட்ட  தீவிரவாதிகளை விரட்ட உதவியவர்கள் பெரும்பாலும் குர்தீஷ் படைகளே என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பல தடவைகள் பாராட்டியிருக்கின்றன.

தம் மீது துருக்கி நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்தாத பட்சத்தில் தாம் காலிபாத் தீவிரவாதிகள் மீது நடத்தும் போரைத் தொடர முடியாது என்று குர்தீஷ் இயக்கங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. துருக்கியின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கொள்ளவும், திருப்பித் தாக்கவும் மட்டுமே தங்களால் தற்போதைய நிலையில் முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

துருக்கியின் தாக்குதல்களின்போது குர்தீஷ் இயக்கங்களால் கைது செய்யப்பட்டுக் குடும்பத்துடன் முகாம்களில் வைத்திருந்த பலர் தப்பியோடியிருக்கிறார்கள். அவர்களுடன் ஏற்கனவே மறைந்திருக்கும் தீவிரவாதிகளும் ஒன்று சேர்ந்து மீண்டும் வலிமை பெறலாம் என்று எச்சரிக்கை எழுப்பப்படுகிறது.

சிரியாவில் குர்தீஷ் இயக்கங்களின் ஆட்சியின் கீழிருக்கும் பகுதியில் அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்க இராணுவ முகாம்களும் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. துருக்கியின் தாக்குதலானது குர்தீஷ் பகுதியிலிருக்கும் தமது படைகளுக்குப் பாதுகாப்பானது அல்ல என்று அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடுகிறது. ஏற்கனவே சில வருடங்களாக துருக்கியுடன் அமெரிக்காவுக்கு இருக்கும் மனக்கசப்பு இதனால் மேலும் அதிகரிக்கலாம். அத்துடன் அமெரிக்கப் படைகள் தாக்கப்படும் பட்சத்தில் அவை துருக்கிய இராணுவத்தைத் திருப்பித் தாக்கவேண்டிய நிலைமை ஏற்படலாம் என்றும் அதனால் அப்பிராந்தியத்தில் நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *