அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாகக் கறுப்பினப் பெண்ணொருவர் வர வாய்ப்பு உண்டாகியிருக்கிறது.

அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்படும் 9 நீதிபதிகளும் தமது வாழ்நாள் காலம் முழுவதும் பதவியிலிருக்கலாம். அரசியலமைப்புச் சட்டத்தைத் தொடும் வழக்குகள் அந்த நீதிமன்றத்தை எட்டும்போது அதற்கான முடிவு பெரும்பான்மையானவர்களால் எடுக்கப்படவேண்டும். அந்தச் சந்தர்ப்பத்தில் நீதிபதிகள் பழமைவாதிகளா, மாற்றத்தை விரும்புகிறவர்களா என்பது முக்கியமாகிறது. எனவே கொன்சர்வேட்டிவ் கட்சி, டெமொகிரடிக் கட்சி இரண்டுமே தங்களிடம் ஆட்சிப்பலம் இருக்கும்போது அதற்கான நீதிபதிக் காலியிடம் இருக்கவேண்டும் என்று ஏங்குவதுண்டு.

தற்போதைய நிலையில் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் 6 பழமைவாதிகள் – 3 மாற்றம் விரும்பிகள் நீதிபதிகளாக இருக்கிறார்கள். டொனால்ட் டிரம்ப் காலத்தில் மூன்று நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்க அவரால் முடிந்தது. செப்டெம்பர் 2020 இல் கடைசியாக தனது 87 வயதில் மரித்த மாற்றம் விரும்பும் நீதிபதி ருத் பாதர் கின்ஸ்பெர்க் இடத்துக்கு தனது பதவிக்காலம் முடிய முதல் 

டிரம்ப் ஒரு பழமைவாதி நீதிபதியான அமி கோனி பரட்டை நியமித்தார். அது டெமொகிரடிக் கட்சியினருக்கு மிகவும் பாதகமாகியது.

அதன் தாக்கமே, அவர்கள் தற்போது தமது கோட்பாடுகளுக்கு ஆதரவான நீதிபதி ஸ்டீபன் பிரெய்யரை பதவி விலகும்படி அழுத்தம் கொடுக்கக் காரணமானது என்று கருதப்படுகிறது. 83 வயதான பிரெய்யர் தான் உச்ச நீதிமன்றப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அதன் மூலம், ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

தற்போது செனட் சபையில் 50 – 50 பிரதிநிதிகள், பிரதிநிதிகள் சபையில் கணிசமான பெரும்பான்மை என்று ஆட்சியிலிருக்கிறது டெமொகிரடிக் கட்சி. இவ்வருடம் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல்களின் பின்பு இரண்டு சபைகளிலும் பிரதிநிதிகளின் கலவை எண்ணிக்கை மாறலாம் என்று பல அரசியல் வல்லுனர்கள் கணிக்கிறார்கள். அது மாறினால், டெமொகிரடிக் கட்சியினருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்கும் வாய்ப்புக் குறையலாம்.

தனது பதவிக்காலத்தில் முடியுமானால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஒரு கறுப்பினப் பெண்ணை நியமிப்பது என்பது ஜோ பைடனின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். அவர் அதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். எனவே, அந்த இடத்திற்கு வரப்போகும் பெண்மணி யாராக இருக்கும் என்ற ஆருடங்கள் ஆரம்பித்திருக்கின்றன.

அவர்களில் ஒருவர் 45 வயதான கலிபோர்னியா லியோண்டிரா குரூகர் சுமார் 6 வருடகாலம் ஒபாமா ஆட்சியில் வழக்குரைஞராக இருந்தவராகும். இரண்டாவது, 51 வயதான கெதாஞ்சி பிரௌன் ஜக்ஸன் ஆகும். அவர் கொலம்பியா மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

அவர்களைத் தவிர உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கூட அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. நீண்ட கால வழக்கறிஞர் அனுபவமுள்ள ஹாரிஸ் அப்பதவிக்கு வருவாரானால் ஜோ பைடனுக்கு அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது கேள்விக்குறியாகும் என்பது பிரச்சினைக்குரிய இன்னொரு கேள்வியாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்