கடலுக்குள் மூழ்கிய அமெரிக்காவின் அதிநவீனப் போர்விமானத்தை வெளியே எடுப்பது யார்?

திங்களன்று போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது தமது போர் விமானமொன்று கடலுக்குள் வீழ்ந்து மூழ்கிவிட்டதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. தென்சீனக்கடலில் விழுந்து கடலடியில் தாழ்ந்துவிட்டது அந்த விமானம். அதுபற்றி மேலதிக விபரங்கள் எதையும் அமெரிக்கா குறிப்பிடவில்லை. USS Carl Vinson என்ற போர்க்கப்பலில் இறங்க முற்படும்போது அது அடிமட்டத்துக்கு மூழ்கியதாகவும், அச்சமயம் ஏழு இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் மட்டுமே இதுவரை தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

மணிக்கு 2000 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடிய அந்த ரகம் 2019 இல் தான் பாவனைக்கு எடுக்கப்பட்ட அமெரிக்கப்போர் விமான ரகம் F-35C ஆகும். அந்த விமானமொன்றின் விலை சுமார் 100 மில்லியன் டொலராகும். விமானம் கடல்மட்டத்தில் இருக்குமிடம் சர்வதேசக் கடல் என்று உலகளவில் கருதப்படுகிறது. ஆனால் சீனாவோ அது தனக்குரியது என்று சாதித்துவரும் பகுதியாகும்.

மூழ்கிவிட்ட விமானத்தை மீட்டெடுப்பதற்காக அமெரிக்க மீட்புக் கப்பலொன்று அவ்விடத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. அக்கப்பல் அவ்விடத்தை அடைய மேலும் சுமார் 10 நாட்களாகலாம் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதற்கு முதல், அந்த விமானத்தின் கறுப்பிப் பெட்டியின் மின்கலங்கள் செயற்படுவது நின்றுவிடலாம், அதனால் விமானம் கிடக்கும் சரியான இடத்தைக் கண்டுபிடிப்பது கடினமாகிவிடும் என்று நாட்டோ அமைப்பின் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிடுகிறார்.

தன்னுடைய் போர் விமானங்களில் இருக்கும் தொழில்நுட்பத்தை விட மிக நுட்பமான செயற்பாடுகளைக் கொண்ட அந்த ரக விமானம் சீனர்களுக்கும் மிகவும் கவர்ச்சியானதாகும். அதை அவர்கள் வெளியே எடுத்து அதிலிருக்கும் விபரங்களை அறிந்துகொள்வார்களானால் அவர்கள் போர் விமானத் திறமையிலும் அமெரிக்காவின் தரத்தை எட்டிவிடுவார்கள். அத்துடன் அந்த விமானம் ஒரு இயங்கும் கணனிப்பெட்டகமாகும். அதிலிருக்கும் பலர் இரகசியங்களும் வேறெவரின் கையில் அகப்படாமலிருப்பது அமெரிக்காவுக்கு அவசியமாகும்.

தமது போர்விமானம் எப்போது எப்படி மீட்கப்படுமென்பதைப் பற்றி அமெரிக்க இராணுவம் எதையும் வெளியிட மறுத்து வருகிறது. அதேசமயம் சீனர்களால் எடுக்கப்பட்ட படங்கள் என்று குறிப்பிடப்படும் குறிப்பிட்ட விமானம் நீர்மட்டத்தில் மிதக்கும் படங்கள் சீனாவின் சமூகவலைத் தளங்களில் வெளியாகியிருப்பதாகச் சில ஊடகங்கள் விபரங்களை வெளியிட்டிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்