ரஷ்யாவை நோக்கிக் கார்களை ஏற்றிக்கொண்டு சென்ற கப்பலை ஆங்கிலக் கால்வாயில் பிரான்ஸ் மறித்தது.

அமெரிக்காவால் முடக்கப்பட்ட ரஷ்யாவின் குறிப்பிட்ட வங்கியொன்றுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலொன்றை பிரான்ஸ் ஆங்கிலக் கால்வாயில் நிறுத்தியது. அது பிரான்ஸின்  Boulogne-sur-Mer துறைமுகத்துக்குத் திருப்பப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டு அதன் மாலுமிகள் சுதந்திரமாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

ரஷ்ய அரசுக்கு நெருக்கமான முக்கிய புள்ளிகள் அவர்களுக்குத் தொடர்புள்ள வங்கிகள் போன்றவையைச் சர்வதேச அளவில் முடக்கும் நடவடிக்கைகளை வெள்ளியன்று அமெரிக்கா அறிவித்தது. அப்படியான பொருளாதார முடக்கங்களில் முதலாவதாக மாட்டப்பட்டிருக்கும் பால்டிக் லீடர் என்ற அந்தச் சரக்குக் கப்பல் Promsvyazbank என்ற வங்கிக்குச் சொந்தமானது, முன்னாள் ரஷ்ய உளவுத்துறைத் தலைவரான மிக்கேல் பிரட்கோவின் மகனுடன் தொடர்புடையது என்று குறிப்பிடப்படுகிறது.

Promsvyazbank அந்தக் கப்பல் தனது உடமையல்ல என்றும் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் போடப்பட முன்னர் வேறொரு நிறுவனத்திடம் விற்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. பிரான்ஸிலிருக்கும் ரஷ்யத் தூதுவராலயம் அக்கப்பல் முடக்கப்பட்டதை ஆட்சேபித்து பிரான்ஸ் அரசுக்கு முறையீடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

சாள்ஸ் ஜெ. போமன்